இதனுட் சுரைமிதப்ப, அம்மி ஆழ, யானைக்கு நிலை முயற்கு நீத்து எனத் துணித்து ஒட்டப், பொருள் விளங்கியவாறு கண்டு கொள்க. இது நாற்சீர்க்கண்ணே துணித்து ஒட்டியது. | “தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட பைங்கூந்தல் வெண்கோழி முட்டை யுடைத்தன்ன மாமேனி அஞ்சனத் தன்ன பசலை2 தணிவேமே வங்கத்துச் சென்றார் வரின். |
இதன்பொருள்:--அஞ்சனத்தன்ன பைங்கூந்தல்! மாமை பொருந்தின மேனிமேல் தெங்கங்காய் போலத் திரண்டுருண்ட கோழிமுட்டை யுடைத்தாலொத்த பசலை, வங்கத்துச் சென்றார் வரில், தணிவேம், எ - று. இதனுள் எண் சீருள் ஒட்டிவந்தது. எண்சீரென வரையறுத்தமையால் அதன்மேற் சென்று ஒட்டாதென்க. (10) அடிமறிப் பொருள்கோள் 403. | அடிமறிச் செய்தி யடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே. |
அடிமறியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அடிமறியென்பதன் செய்தி சீர்நிலை திரியாது அடி நிலைமை திரிந்து தடுமாறும், எ - று. | “சூரல் பம்பிய சிறுகான் யாறே சூரர மகளிர் ஆரணங் கினரே வார லெனினே யானஞ் சுவலே சார னாட நீவர லாறே.” |
இது, சாரல்நாட! நீ வருகின்ற நெறி சூரற்பம்பிய சிறுகான்யாறு, சூரர மகளிர் வருத்தஞ் செய்வார், வாராதொழி யென யான் அஞ்சா நின்றேன் என அடி மாறிப் பொருளுணர்த்தியவாறு கண்டுகொள்க. அஃதேல், இதனை யாப்பிலக்கணத்துள் ஆராய்தல் வேண்டும், சொல் நிலை திரியாமையா லெனின், இது தொடர்மொழித் திரிபாகலான் ஈண்டுக் கூறப்பட்டதென்க. (11) மேலதற்குப் புறனடை 404. | 2பொருடெரி மருங்கின் ஈற்றடி யிறுசீர் எருத்துவயிற் றிரியுந் தோற்றமும் வரையார் அடிமறி யான. |
1. தணிவாமே என்பதும் பாடம். 2. பொருடெரி மருங்கின் ஈற்றடி யிருசீர் எருத்துவயிற் றிரிபுந் தோற்றமும் வரையார் என்பதும் பாடம்.
|