22தொல்காப்பியம் சொல்லதிகாரம்

22

இவ்வுரையாசிரியர் மட்டுமே தனித்த முறையில் கொண்ட பாடபேதங்களும் சிலவுள. அவற்றை மட்டும் ஈண்டுக் காண்போம்.

(1) 117 ஆம் நூற்பாவில் பிறரெல்லாம் “அவைதாம்” என்ற சொல்லைக் கூனாகக் கொள்ள, இவர்மட்டும் “அவற்றுள்” என்ற சொல்லைக் கூனாகக் கொள்கின்றார்.

(2) 147 ஆம் நூற்பாவில் பிறரெல்லாம் “அளவிறந்தனவே” எனப் பாடங் கொள்ள, இவர் மட்டும் “அளபிறந்தனவே” எனப் பாடங் கொள்கின்றார்.

(3) 229 ஆம் நூற்பாவில் பிறரெல்லாம் ‘செய்யுமென் கிளவி” எனப் பாடங்கொள்ள, இவர் மட்டும் ‘செய்யும் கிளவி’ எனப் பாடம் கொள்கின்றார்.

(4) 268 ஆம் நூற்பாவில் பிறரெல்லாம் ‘ஏயும் குரையும்’ எனப் பாடங் கொள்ள, இவர் மட்டும் ஏவும் குரையும்’ எனப் பாடங் கொள்கின்றார்.

(5) 295 ஆம் நூற்பாவில் பிறரெல்லாம் ‘அவைதாம்’ என்ற தனிச் சொல்லுடன் அந்நூற்பாவைக் கூற, இவர் மட்டும் அத்தனிச் சொல்லின்றிப் பாடங்கொள்கின்றார்.

(6) 349 ஆம் நூற்பாவில் சேனாவரையரும், நச்சினார்க்கினியரும், ‘விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும்’ எனவும் இளம்பூரணர் ‘விழுமம் சீர்மையும் இடும்பையும் செய்யும்’ எனவும் பாடங்கொள்ள இவர் மட்டும், ‘விழுமம், சீர்மையும் சிறப்பும் இடும்பையும் செய்யும்’ எனப் பாடங்கொள்கின்றார்.

(7) 354 ஆம் நூற்பாவில் பிறரெல்லாம் ‘துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும்’ எனப் பாடங்கொள்ள, இவர் மட்டும் ‘துவைத்தலும் சிலைத்தலும். இரங்கலும் இயம்பலும்’ என மாற்றிப் பாடங்கொள்கின்றார்.

(8) 358 ஆம் நூற்பாவில் பிறரெல்லாம் ‘கவர்வு’ எனப் பாடங்கொள்ள, இவர் மட்டும் ‘கவர்பு’ எனப் பாடங்கொள்கின்றார்.

(9) 361 ஆம் நூற்பாவில் ‘பேம்’ என நச்சினார்க்கினியரும், ‘பே’ எனச் சேனாவரையரும் பாடங்கொள்ள, இவர் மட்டும் ‘பேஎ’ எனப் பாடங்கொள்கின்றார்.

(10) 394 ஆம் நூற்பாவில் ‘வழாஅமை யிசைக்கும்’ என இளம்பூரணரும், ‘வழாமை யிசைக்கும்’ எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பாடங்கொள்ள, இவர் மட்டும் ‘வழாமல் இசைக்கும்’ எனப் பாடங்கொள்கின்றார்.