[எச்சவியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்197

197

ஒட்டுப் பெயர்க்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். த, ந, நு, எ என்னும் அவை முதலாகியவும், கிளைமை நுதலிய பெயரும் பொருள் நிலையாற் பிரிக்க நினைக்கின் பிரிந்து பொருள்படா. ஒட்டி நின்றே பொருள்படும், எ - று. ஆகியும் என்னும் உம்மை தொக்கு நின்றது.

த, ந, நு, எ, என்னும் அவை முதலாகியவாவன:--தான், தாம், நாம், யாம், யான், நீ, நீர், நீயிர், என மூன்றிடத்துப் பெயர்களும் ஆறாம்வேற்றுமைக் கிழமைப் பொருள் குறித்து, முன்னிலை குறுகியும் திரிந்தும் வந்து, கிழமைப் பொருளுணர்த்துஞ் சொல்லின் ஈற்றெழுத்தோடு ஒட்டி நின்று தமன், தமள், தமர், தமது, தம எனப் படர்க்கையினும்; நுமன், நுமள், நுமர், நுமது, நும என முன்னிலையினும்; நமன், நமள், நமர், நமது, நம: எமன், எமள், எமர், எமது, எம எனத் தன்மையினும் வரும். கிளை நுதற் பெயராவன:--இம்மூன்றிடத்தும் ஒட்டுப்பட்ட பெயர்கள், ஆறாம் வேற்றுமை முறைமையைக் குறித்து மேற்சொல்லியவாற்றான் தந்தை, நுந்தை, எந்தை எனவும்; தாய், ஞாய், யாய் எனவும், தம்முன், நும்முன். எம்முன் எனவும்; தம்பி, நும்பி, எம்பி எனவும்; முதல்வனையும், ஈன்றாளையும், முன் பிறந்தானையும், பின்பிறந்தானையும் உணர்த்தும் பன்மைச் சொற்களெல்லாம் பொருள்முகத்தாற் றம்மையும் பிறரையும் உணர்த்துவன இச்சொற்களெல்லாம் ஏனையபோலப் பிரிக்கப்படா: ஒட்டி நின்றே பொருள்படும். எ - று. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனால், காரணப் பெயராகிவரும் தொழில்பெயரும், உடைய பெயரும், பண்புப்பெயர் முதலாயினவும் பிரிப்பப் பிரியாவென்று கொள்க. பிறன், பிறள், பிறர் என்பவோவெனின், அவை ஒட்டுப்பெயரல்ல என்க.

(14)

தொகைச் சொற்களின் வகை

407.வேற்றுமைத் தொகையே யுவமத் தொகையே
வினையின் தொகையே பண்பின் தொகையே
உம்மைத் தொகையே யன்மொழித் தொகையென்
றவ்வா றென்ப தொகைமொழி நிலையே.

தொகைச் சொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். வேற்றுமைப் பொருள் குறித்த தொகையும், உவமப் பொருள் குறித்த தொகையும், வினைத்தொழில் குறித்த தொகையும், பண்பு குறித்த தொகையும், உம்மைத் தொகை செய்யுந் தொகையும், அல்பொருள் குறித்த தொகையும் என அறுவகைப்படும் தொகைச்சொல்லது நிலைமை, எ - று.

தொகைச்சொல்லாவது:-பொருளுணர்த்துஞ் சொல்லாயினும், தொழிலுணர்த்துஞ் சொல்லாயினும் இரண்டு சொல் விட்டிசைத்து நில்லாது ஒட்டி நிற்பது. இஃது ஒட்டுப் பெயர் என்னுங் குறியும் பெறும். உதாரணம் வருகின்ற சூத்திரத்துட் காட்டுதும்.

(15)