எவ்வாறு வரினும் இரண்டு சொல்லாகி வந்தல்லது ஒட்டுப்படா தென்று கொள்க. அஃதாயவாறு என்னையெனின், பூத்தொடை போலக்கொள்க. அஃது இரண்டாயவாறு என்னையெனின், முற்பட இரண்டு பூவை எடுத்து ஒன்றாகக் கட்டும். அதன்பின் அவ்விரண்டும் ஒன்றாகி நின்ற தொடையோடேகூடப் பின்னும் ஒரு பூவை யெடுத்துக் கட்டும். அதன்பின் அம்மூன்று பூவும் ஒன்றாகக் கட்டப்பட்ட தொடையோடே பின்னும் ஒரு பூவை எடுத்துக் கட்டும். அவ்வாறு கட்டப்பட்ட தொடைகளைப் பின்னும் இரண்டு பின்னாகச் சேர்த்தது ஒன்றாக்கும். இவ்வாறே எல்லாப்பூவும் இரண்டொன்றாக இணைத்ததாம். சொற்றொடையும் ஒட்டுப்படுங்கால் அவ்வாறு வருமென்று கொள்க. ‘உலக முவப்ப,,,,,,,,,,,...வாணுதல் கணவன்’ என்பது இரண்டொன்றாக ஒட்டியவாறு என்னையெனின் உலகமென்பது உலகத்துள்ளார்க்குப் பெயராகி உவப்ப என்னும் செயவென்னெச்சத்தோடு முடிந்தது. வலனாக என்னும் எச்சத்துக்கண் ஆகவென்பது செய்யுள் விகாரத்தால் தொக்கு நின்றது. தொக்குநின்ற காலத்தும் அதற்கு இயல்பு முற்பட்ட நிலைமை யென்று கொள்க. என்போலவெனின், வாலுஞ்செவியும் இழந்த ஞமலியைப் பின்னும் ஞமலியென்றே வழங்கினாற்போல, உவப்ப வலனாக என்னும் செயவென்னெச்சமும், ஏர்பு என நிகழ்காலங் குறித்த செயவென்னெச்சமும் திரிதரு வென்னும் பெயரெச்சத்தோடு முடிந்தன. பலராலென்னும் மூன்றாம் வேற்றுமை ஏற்ற பெயர் உருபு தொக வருதல் என்னும் இலக்கணத்தால் தொக்குப் பலரென நின்றது. அது புகழப்பட்ட என்பதற்கு அடையாகி நின்றது. அடையெனினும் விசேடணம் எனினும் ஒக்கும். புகழப்பட்ட வென்னும் பெயரெச்சம், உண்சோறென்றாற்போலப் பொருண்மேல் வந்து வினைத்தொகையாகிப் புகழ்ஞாயிறென ஒட்டி ஒரு சொல்லாகி நின்றது. அது திரிதருவென்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று, ஞாயிறு என்பதற்கு முன்னுள்ள சொல்லெல்லாம் தொகுத்து நோக்க ஞாயிற்றிற்கு அடையாகி நின்றன. ஞாயிற்றை யென்னும் உருபு தொக்கு நின்றது. கடலின்கண்ணென்னும் உருபு தொக்கு நின்றது. கண்டாங்கு என்பது கண்டாற்போலும் என்னும் உவமப் பொருள் உணர நின்றது. இத்துணையும் உணர்த்தப்பட்டது உதய ஞாயிறுபோல என்னும் பொருண்மை. 1ஓவற என்பது-ஓவு ஒழிவு. அற என்பது இல்லையாக என்னுஞ் செயவெனெச்ச வாய்பாடு. அதற்கு ஓவு என்பது அடையாகி நின்றது. அறவென்பது இமைக்கும் என்னும் பெயரெச்சத்தோடு முடிந்தது. சேணின்கண் என்பது சேண் என உருபு தொக்கு நின்றது. அது விளங்கும் என்பதற்கு அடையாகிநின்றது. அவிர் என்பது விளக்கத்தின் மிகுதியைக் குறித்து வந்து ஒளியென்னும் பெயரோடு வினைத்தொகையாகி, அவிரொளியென ஒரு சொல்லாயிற்று. அது விளங்கு என்பதனோடு ஒட்டி வினைத்தொகையாகி, விளங்கவிரொளி யென ஒரு சொல்நீர்மைப்பட்டது. அஃது இமைக்கும் என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. உலகம் என்பது முதலாக இத்துணையுங் கூறப்பட்டது ஞாயிறு போல் விளங்கும் ஒளியென ஒளிக்கு அடை கூறுதலான், அவ்வொளியோடே எல்லாச் சொல்லும் முற்றி நின்றன. உறுநரை என்பது உறுநர் என உருபு தொக்கு நின்றது. தாங்கிய என்பது பெயரெச்சம். அதற்கு உறுநர் என்பது அடையாகி நின்றது. 2மதன் என்பது வலி. அது மத என்னும்
1. ஓவற = ஒழிவற: 2. மதன் = அறியாமை (நச்) அழகு - வேறுரை.
|