24தொல்காப்பியம் சொல்லதிகாரம்

24

நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது. அவர்கட்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

9. நன்றியுரை

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளரும், எனது பேரன்பிற் குரியவருமான திருவாளர், வ. சுப்பையா பிள்ளையவர்கள் விரும்பியபடி இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவிற்கும், அவ்வந்நூற்பா நுவலும் பொருளைத் தலைப்பில் காட்டியும், நூற்பாக்களில் காணும் பாட பேதங்களையும், இன்றியமையாத மேற்கோள் பகுதிகளையும், உரையில் காணும் இலக்கியங்கள் எவ்வெந்நூல்களில் உள்ளன என்பதையும் அடிக்குறிப்பில் காட்டியும் உள்ளேன். இவ்வுரையோடு ஒப்புநோக்குதற்கு வேறு பிற பதிப்புக்களோ, ஏடுகளோ இன்மையால், முன்புள்ள பதிப்பில் பிற்சேர்க்கையாகக் கண்டவற்றைப் பெரிதும் உரையில் ஏற்றியும், ஏலாதனவற்றை ஏற்காது உள்ளவாறே கொண்டும் உரை யெழுதியுள்ளேன். இந்நூலின் பிற்பகுதியில் தெய்வச்சிலையார் உரையை யுணர்ந்து கொள்ளவும், இதனோடொத்த பிற உரையாசிரியர்கள் உரையினை இவ்வுரையோடு ஒப்பிட்டு மகிழவும் வாய்ப்பாகுமாறு விளக்கவுரையும் எழுதிச் சேர்த்துள்ளேன்.

இந்நூலை இத்துணைச் சீரிதாக வெளியிட்டமைக்குக் கழகத்தாருக்கும், என் ஆராய்ச்சிப் பணிக்குத் துணைபுரிந்த என் அருமை அன்பர் புலவர் திரு. மா. விசுவநாதன் அவர்கட்கும், க.வடிவேலன் அவர்கட்கும் எனது நன்றி என்றும் உரியதாகும்.

இதுபோன்ற அருந்தமிழாராய்ச்சியில் எனக்கு ஊக்கமும், அதற்கேற்ற வாய்ப்பும் நல்கியருளிவரும் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித்தம்பிரான் சுவாமிகள் அவர்களுக்கும், அவர்களின் இளவரசாய்த் திகழ்ந்துவரும் வித்துவான், ஸ்ரீ முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்களுக்கும் அடியேன் பணிவான வணக்கங்களைச் செலுத்திக் கொள்கிறேன்.