2தொல்காப்பியம்[கிளவியாக்கம்]

2

பெயரியலுள்ளும், வினையிலக்கணம் வினையியலுள்ளும், இடைச்சொல்லிலக்கணம் இடைச்சொல்லோத்தினுள்ளும், உரிச்சொல்லிலக்கணம் உரிச்சொல் லோத்தினுள்ளும், எஞ்சிய வெல்லாம் எச்சவியலுள்ளும் உணர்த்தினா ரென்று கெள்க. இவ்வகையினா னோத்தும் ஒன்பதாயிற்று.

பொருளுணர்த்துவன தனிமொழியாதலால், தொடர்மொழி யெனவகுத்ததனாற் பயனென்னை யெனின், பொருளுணர்த்துதற்குச் சிறப்புடையன தொடர்மொழியென்று கொள்க. என்னை சிறந்தவாறெனின், சாத்தனென்றவழிப் பொருண்மை மாத்திர முணர்த்துதலல்லது கேட்டார்க் கொரு பயன்பட நில்லாமையின், சாத்தனுண்டானெனப் பயன்பட வரூஉந் தொடர்மொழியே பொருள் இனிது விளக்குவதென்க. சொல்லிலக்கணம் அறிந்ததனாற் பயன், தொடர்மொழியாகிய வாக்கியத்தினைப் பிரித்துப் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்லெனக் குறியிடவேண்டுதலின் அதன்பிற் கூறப்பட்டது.

இனி, எழுவாய் வேற்றுமையையும் விளி வேற்றுமையையும் எழுத்ததிகாரத்துள் அல்வழிக்கண்ணே முடித்தா ராதலான் அவற்றை வேற்றுமைத் தொடரென்ற லமையாதெனின்:-- அவை வேற்றுமை யென்று குறிபெறுதலானும், எழுவாய் வேற்றுமை கிளவியாக்கத்தொடு மணந்துகிடப்ப வைத்தலானும், விளிவேற்றுமை எழுவாயது திரிபாதலானுமமையு மென்க.

இவ்வதிகாரத்துக் கூறப்பட்ட வொன்ப தோத்தினுள்ளும் முதற் கண்ணது கிளவியாக்கம். அது கிளவிய தாக்கமென விரியும். அதற்குப் பொருள், சொல்லினது தொடர்ச்சி யென்றவாறு. சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து பொருண்மேலாகு நிலைமையைக் கிளவியாக்க மென்றார். அது வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையாகி, அதனையுடைய வோத்திற்குப் பெயராயிற்று.

இவ்வோத்தினுள் இச் சூத்திரமென்னுதலிற்றோ வெனின், சொல்லிலக்கண முணர்த்துதல் நுதலிற்று.

இதன் பொருள். உயர்தலென்பது மிகுதல் திணை யென்பது பொருள். என்மனாரென்பது என்று சொல்லுவார், என்றவாறு, மக்களென்பது மக்களென்னும் பொதுப்பொருண்மை, சுட்டென்பது குறிப்பு, இனச்சுட்டில்லா வெனவும், தெய்வஞ்சுட்டிய வெனவும் ஓதினாராகலின், அது சுட்டுப்படும் பொருண்மேல் ஆகுபெயராய் நின்றது ஏயென்ப தீற்றசை: அல் என்பது அல்லாமை, திணை யென்பதற்கும் என்மனா ரென்பதற்கும் மேலுரைத்தவாறே கொள்க. அவரலவென்பது மக்களல்லாத பொருள். பிற என்பது பிற பொருள். மக்களல்லாதவும் பிறவும் என்னும் உம்மை எஞ்சி நின்றது. ஆயென்பது அவ்வென்னுஞ் சுட்டு நீண்டிசைத்தது. இருதிணை யென்பது இரண்டு திணையின்கண்ணும், என்றவாறு, கண்ணென்னும் உருபும் உம்மும் தொக்கு நின்றன. இசைக்குமன சொல் லென்பது ஒலிப்பன சொல்லாவன, என்றவாறு.

உலகத்துப் பொருளெல்லாவற்றினும் மக்களென்று சுட்டப்படும். பொருளை உயர்திணையென்று சொல்லுவர். அவரல்லாத பொருளையும் பிறபொருளையும் அஃறிணையென்று சொல்லுவர் ஆசிரியர். அவ்விரு திணையின்கண்ணு மொலிப்பன சொல்லாவன என்றவாறு.