236தொல்காப்பியம் சொல்லதிகாரம்

236

ஆனால் தெய்வச்சிலையாரோ கிளவியாக்கத்தை அல்வழி யிலக்கணம் கூறும் இயலாகக் கருதினர். ஆசிரியர் அல்வழியை இவ்வியலிலும், வேற்றுமை யிலக்கணத்தையும் அதனது மயக்கத்தையும் சிறப்பில்லா விளி வேற்றுமையையும் அடுத்து இருக்கும் மூன்றியல்களிலும் கூறிப் பின் பெயர் வினை இடை யுரிகளை அவ்வவ்வியலிலும், அவற்றுள் கூறா தொழிந்தனவற்றை எச்சவியலிலும் உணர்த்தி முறைப்படுத்தினர் என்பது தெய்வச்சிலையார்
கருத்து.

எழுவாய் வேற்றுமையையும், விளி வேற்றுமையையும் எழுத்ததிகாரத்துள் அல்வழிக்கண்ணே முடித்தார் என்பது,

“ஐ ஒடு குஇன் அதுகண் ணென்னும்
அவ்வா றென்ப வேற்றுமை யுருபே”

(புணரி.11)

என்னும் சூத்திரம் நோக்கியேயாகும். அந் நூற்பாவினிறுதியில் இளம்பூரணர், “இவ்வாறும் (ஐ, ஒடு, கு, இன், அது, கண்) அல்லன வெல்லாம் அல்வழி எனப்படும். அவை எழுவாயும், விளியும், உவமத்தொகையும், உம்மைத் தொகையும், பண்புத்தொகையும், முற்றும், இருவகை யெச்சமும், இடையும், உரியும் என இவை” எனக் கூறுவதால் எழுவாயும் விளியும் அல்வழியின்பாற்படும் என அறியலாம். ஆயினும் நூலாசிரியர் எழுவாயும், விளியும் அல்வழி என நூற்பாவால் எடுத்துக் கூறவில்லை. ஆனால் நன்னூலார்,

“வேற்றுமை ஐம்முதல் ஆறாம் அல்வழி
தொழில்பண் புவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளிஈ ரெச்சம்முற் றிடையுரி
தழுவு தொடர் அடுக் கெனஈ ரேழே”

எனத் தாமே நூற்பாவில் கூறியுள்ளார். இங்ஙனம் அவர் செய்தற்குக் காரணம் இந்நூற்பாவும் இவ்வுரையுமே ஆகும்.

இங்ஙனம் எழுவாயையும், விளியையும் அல்வழியுள் அடக்கிய ஆசிரியர் வேற்றுமையியலில் அவற்றையும் சேர்த்து வேற்றுமை எட்டென்றல் எங்ஙனம் பொருந்தும் என்னும் வினாவைத் தாமே எழுப்பிக்கொண்டு, அதற்கு மூன்று காரணம் கூறி அது அமைதி பெறுமாற்றை விளக்குகின்றார் தெய்வச்சிலையார். அவையாவன;-

(1)எழுவாயும், விளியும் அல்வழியாமேனும், அவ்விரண்டும் வேற்றுமை என்ற பெயரையும் பெற்று வருகின்றது என்பது.
(2) அவ்வெழுவாய், வேற்றுமை யென்று பெயர் பெறினும், அல்வழி யிலக்கணம் கூறும் கிளவியாக்கத்தோடு இயைபு பட்டுக்(கிளவியாக்கம் முடிந்ததும், வேற்றுமை யியல் முதற்கண் எழுவாய் வேற்றுமை வைத்திருப்பதுபற்றி இங்ஙனம் கூறுகின்றார்). கிடத்தலின் பொருந்து மென்பது.