238தொல்காப்பியம் சொல்லதிகாரம்

238

“உயர்திணை என்பது உயர்ந்த ஒழுக்கம் என இறந்தகால வினைத்தொகை. அஃது ஆகு பெயராய் அப்பொருளை யுணர்த்தி நின்றது. இதனைப் பண்புத்தொகை என்பாரும் உளர். அது பொருந்தாது. என்னை? இது காலந் தோன்றி நிற்றலின்.”

சங்கர நமச்சிவாயர் உயர்திணை பண்புத்தொகையேயாம் என்றும், வினைத்தொகையெனல் எவ்வாற்றானும் பொருந்துவதன்று என்றும் உரைப்பர். அவர் உரை வருமாறு:

“உயர்திணையை உயர்ந்த திணை யென இறந்தகால வினைத் தொகையாக விரிக்கின் மரம் நாடோறும் உயர்ந்தமை கருதி உயர் மரம் எனவும், கல்வியறிவு நாடோறும் உயர்ந்தமை கருதி அதனையுடையார் மேலேற்றி உயர்மக்கள் எனவும் கூறும் வினைத்தொகை போல உயர்திணை யென்பதற்கு உயரும் புடைபெயர்ச்சி வினைகாட்சி வகையானும், கருத்து வகையானும் இன்மையின் அது வினைத்தொகை யன்றாம்.” இக் கருத்தே வலியுடையதாம்.

என்மனார் என்பதில் முன்னர்ப் பகரம் குறைத்துப் பின்னர் மன், ஆர் என்னும் இரண்டிடைச் சொற்களையும் பெய்து விரிப்பவர் இளம்பூரணரே யாவர். இக் கருத்தினைத் தெய்வச்சிலையார் மறுப்பது போலச் சேனாவரையரும் மறுத்துரைப்பர். அம்மறுப்பு வருமாறு:

“என்ப என்னும் முற்றுச் சொல்லினது பகரம் குறைத்து மன்னும் ஆரும் என இரண்டு இடைச் சொல் பெய்து விரித்தார் என்று உரையாசிரியர் கூறினாரால் எனின், ‘என்மனார்’ என்பது இடர்ப்பட்டுழிச் சிறுபான்மை வராது, நூலுள்ளுஞ் சான்றோர் செய்யுளுள்ளும் பயின்று வருதலானும், ‘இசை நிறை’ என்பது மறுத்துப் பொருள் கூறுகின்றார், பின்னும் இசைநிறை என்றல் மேற்கோள் மலைவாதலானும், அவர்க்கது கருத்தன்றென்க.

என்மனார் என்பது செய்யுள் முடிபு எய்தி நின்றதோர் எதிர்கால முற்றுச் சொல் என்பர் சேனாவரையர். இது ஆர் ஈற்று நிகழ்கால முற்றுவினைத் திரி சொல் என்பர் நச்சினார்க்கினியர். இது எதிர்கால முற்றுச் சொல் எனினும் ஈண்டு இறந்தகாலம் குறித்து நின்றது என்பர் தெய்வச்சிலையார். இங்ஙனம் எதிர்காலச் சொல் இறந்தகாலச் சொல்லாகப் பொருளுணர்த்துதற்கு விதி,

“இறப்பே எதிர்வே ஆயிரு காலமும்
சிறப்பத் தோன்றும் மயங்குமொழிக் கிளவி”

(வினையியல். 50)

என்னும் நூற்பாவாகும். ஆண்டும் இதனையே எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ளார் தெய்வச்சிலையார்.