2 ஆம் நூற்பா ‘சிவணி’ என்பதை வினையெச்சமாகக் கொள்வர் சேனாவரையரும், நச்சினார்க்கினியரும். இவ்வுரையாசிரியர் போன்றே இளம் பூரணரும், கல்லாடரும் சிவணி என்னும் சொல்லிற்கு உரை காணுகின்றனர். 3 ஆம் நூற்பா இந் நூற்பாவிற்குள்ள விளக்கம் பொருள் அமைவின்றிக் காணப்படுகின்றது. ஆயினும் அதன் கருத்து ஒருவாறு தெரிகின்றது. அது வருமாறு:- உயர்திணையில் ஆண் பெண் பகுப்புளதாக வகுத்த ஆசிரியர் அஃறிணையில் அங்ஙனம் பகுக்காது ஒருமை, பன்மை மட்டுமே உளவாகக் கூறக் காரணம் என்னை யெனில், உயர்திணையில் ஆண்பாற்கும் பெண்பாற்கும் தனித்தனியே வினையீறுகள் இருத்தலின் (வந்தான், வந்தாள் என) அதனை அங்ஙனம் பகுத்தார். ஆனால் அஃறிணையிலோ ஆண், பெண் பகுப்பு இருப்பினும் அவற்றிற்குரிய வினையீறுகள் இன்றி, ஒருமை பன்மைக்குரிய வினையீறுகளே (வந்தது, வந்தன என) இருத்தலின் அச்சொல் முடிபுபற்றி ஒருமை பன்மை மட்டுமே வகுத்தனர் என்பதாம். சங்கர நமச்சிவாயரும் இவ்வாய்வினை எடுத்துக்கொண்டு வேறு காரணம் கூறுவர். அது வருமாறு: அஃறிணைக்கண்ணுஞ் சேவலென்றற் றொடக்கத்து ஆண்பாலும், பெடையென் றொடக்கத்துப் பெண்பாலும் உளவேனும், அவ்வாண்பாலும் பெண்பாலும் உயிருள்ளனவற்றுட் சிலவற்றிற்கும் உயிரில்லனவற்றிற்கும் இன்மையின், அப்பகுப் பொழித்து எல்லாவற்றிற்கும் பொருந்த ஒன்றெனப்பட்டது. 4 ஆம் நூற்பா ஆண் இலக்கணமும் பெண் இலக்கணமும் விரவி ஒரு வகையேனும் நிரம்பாது நிற்பது பேடு ஆகும். ஆண்மை குறைந்து பெண்மை நிரம்பியதைப் பேடி என்றும், பெண்மை குறைந்து ஆண்மை நிரம்பியதை அலி என்றும் கூறுவர் சான்றோர். எனினும் தெய்வச்சிலையார் ஆணிலக்கணமும் பெண்ணிலக்கணமும் விரவி ஒருவகையேனும் நிரம்பாது நிற்பது அலி என்றும், அது மூவகைப்படும் என்றும் கூறி விளக்குகின்றார். பெண்பிறப்பிற் றோன்றிப் பெண்ணுறுப்பின்றித் தாடி தோற்றி ஆண்போலத் திரிவதே ‘பேடி’ என்பர் தெய்வச்சிலையார். “ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காமனாடிய பேடியாடலும்” என்ற பகுதியால் இளங்கோவடிகளும் இப்பேடியின்
|