240தொல்காப்பியம் சொல்லதிகாரம்

240

இயல்பை நன்கு விளக்குவர். இதன் இயல்பை அடியார்க்கு நல்லார் விளக்குவர். அது வருமாறு:-

“ஆண்மைத் தன்மையில் திரிதலாவது விகாரமும், வீரியமும், நுகரும் பெற்றியும், பத்தியும் பிறவும் இன்றாதல். ஆண்மை திரிந்த என்றதனால் தாடியும், பெண்மைக் கோலத்து என்பதனால் முலை முதலிய பெண்ணுறுப்புப் பலவும் உடையது ஆண் பேடு எனக் கொள்க” என்பது. இவர் ஆண்மை திரிந்த பேடியை ‘ஆண் பேடு’ எனக் குறித்துள்ளார்.

8 ஆம் நூற்பா

தகர வுகரம் மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றி வருதலும், றகர வுகரம் இறந்தகாலமும் வினைக்குறிப்பும் பற்றி வருதலும், டகர வுகரம் வினைக் குறிப்பே பற்றி வருதலும் ஆகிய வேறுபாடு உடைமையால் குற்றியலுகரமென ஒன்றாகாது மூன்றாயின என்பர் சேனாவரையர்.

9 ஆம் நூற்பா

அஃறிணைப் பலவின்பால் ஈறாக, அ, ஆ, வ என மூன்று ஈறுகள் கூறப்படுகின்றன. இவற்றுள் வகர ஈறும் அகர ஈற்றுள் அடங்கு மன்றோ? வேறு கூறியதென்னை யெனில், உண்கு என்னும் எதிர் காலச் சொல் அஃறிணைப் பலவின்பாலாக வருவழி அகர ஈறே ஏற்கவேண்டும். அங்ஙனம் வருவழி உண்கு+அ = உண்க என முடியும். அங்ஙனம் முடியின் அது வியங்கோள் ஈறாகுமே யன்றி அஃறிணைப் பலவின்பால் ஈறு ஆகாது. எனவே ‘குகரம்’ வருவழி ‘வகரம்’ இன்றியமையாது வேண்டப்படுதலின் வகரஈறு என்ற ஒன்றும் இன்றியமையாது வேண்டப்படுவதேயாம்.

ஆயினும் நன்னூலார் அஃறிணைப் பலவின்பாலுக்கு அ, ஆ என்ற இரண்டு ஈறுகளையே கொண்டனர்.

10 ஆம் நூற்பா

இருதிணை மருங்கின் ஐம்பாலறிய ஈற்றினின்றிசைக்கும் பதினோரெழுத்துக்கள்: ன, ள, ர, ப, மார், து, று, டு, அ, ஆ, வ என்பன.

இவை வினைக்கண் வருங்கால் பால் விளக்குதலே யன்றிச் சிறுபான்மை பெயர்க்கண் வருவழியும் பால் விளக்கும் என்பது தெய்வச்சிலையார் கருத்து. அதனால்தான் அவ்வவ் வீறுகளுக்கும் எடுத்துக்காட்டுக்கள் தரும்பொழுது பெயர்க்கும் எடுத்துக் காட்டுக்கள் தந்து வந்துள்ளார். இந்நிலை பிறருரைகளில் காணாததாகும்.