ஆயினும் பெயர்கள், மேற்கூறிய ஈறுகளுடன் வந்து பால் விளக்குதலே யன்றிப் பிற ஈற்றுடன் வந்தும் பால் விளக்குதலின் ‘பெயரொடு வருகை சிறுவரவிற்று’ என்றார். 11 ஆம் நூற்பா திணைவழு பன்னிரண்டாவன: உயர்திணைப்பால் மூன்றும் அஃறிணைப்பால் இரண்டனொடு மயங்க உயர்திணைவழு ஆறாகும். அஃறிணைப்பால் இரண்டும் உயர்திணைப்பால் மூன்றனொடு மயங்க அஃறிணைவழு ஆறாகும். ஆகத் திணைவழு பன்னிரண்டாதல் காண்க. பால்வழு எட்டாவன: உயர்திணைப்பால் மூன்றுள் ஒவ்வொன்றும் ஏனையவற்றோடு மயங்க உயர்திணைப் பால்வழு ஆறாம். அஃறிணைப்பால் இரண்டும் ஒவ்வொன்றும் ஏனையதனோடு மயங்க அஃறிணைப் பால்வழு இரண்டாம். ஆகப் பால்வழு எட்டாதல் காண்க. இடவழு ஆறாவன: மூன்று இடங்களில் ஒவ்வொன்றும் ஏனையவற்றோடு மயங்க ஆறாதல் காண்க. காலவழு ஆறாவன: மூன்று காலங்களில் ஒவ்வொன்றும் ஏனையவற்றோடு மயங்க ஆறாதல் காண்க. 12 ஆம் நூற்பா “ஆண்மை திரிந்த பெயர்நிலைக்கிளவி ஆண்மை அறி சொற்கு ஆகிடன் இன்று” என்பதால் அது பெண்பாலாய் இசைக்கும் என்பதே கருத்தாகும். எனினும் இளம்பூரணரும், தெய்வச்சிலையாரும் இப் பேடி என்பது சிறுபான்மை ஆண்பாலாயும் இசைக்கும் என்றனர். இது ஆராயத்தக்கது. நன்னூலாரும் “ஆண்மை விட்டு அல்லது அவாவுவ பெண்பால்” என்றே கூறினர். 13 ஆம் நூற்பா செப்பு செவ்வன் இறையும், இறை பயப்பதும் என இரு வகைப்படும் எனச் சேனாவரையரும், நச்சினார்க்கினியரும், வினாவெதிர் வினாதல், ஏவல், மறுத்தல், உற்றது உரைத்தல், உறுவது கூறல், உடம்படுதல் என அறுவகைப்படும் என இளம்பூரணரும் கூறுவர். இளம்பூரணர் கருத்தைச் சேனாவரையர் மறுப்பர். அதனை அவர் உரையானறிக. வினா, அறியான் வினாதல், அறிவொப்புக் காண்டல், ஐய மறுத்தல், அவனறிவு தான் கோடல், மெய்யவற்குக் காட்டல் என
|