ஐவகைப்படும் என இளம்பூரணரும், அறியான் வினா, ஐய வினா, அறிபொருள் வினா என மூவகைப்படும் எனச் சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் கூறுவர். சேனாவரையர் தாம் காட்டிய மூவகையுள் இளம்பூரணர் கூறும் ஐவகை வினாவும் அடங்கு மென்பர். தெய்வச்சிலையார் வினாவினைப் பகுத்துக் கூறவில்லை. இத்திறமெல்லாம் அவரவர் உரை நோக்கி அறிக. 14 ஆம் நூற்பா வினவுவானால் வினவப்படும் சொல்லைக்கொண்டே விடையிறுப்பான் தானும், அச் சொல்லாலேயே விடையிறுப்பதும் உண்டு என்பது இந்நூற்பாவின் கருத்தாகும். இதனையே இளம்பூரணர் வினாவெதிர்வினாதல் என்பர். 15 ஆம் நூற்பா செப்பே என்பதில் உள்ள ஏகாரம் சிறப்புப் பொருளில் வரும் என்கின்றார் தெய்வச் சிலையார். ஏகாரம் தேற்றம், வினா, பிரிநிலை, எண், ஈற்றசை ஆகிய ஐந்து பொருளில் வரும் என இடையியலில் (நூற்பா-9) கூறியிருக்க ஈண்டுச் சிறப்புப் பொருளில் வரும் என மிகைபடக் கூறியது அதிகாரப் புறனடையாற் கொள்ளப்படும் என்பர் தெய்வச்சிலையார். எனினும், இந்த ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது என்றும், இதனாற் பிரிக்கப்பட்டது வினா என்றும் கூறுவர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும். இந் நூற்பாவிற் கூறப்படும் செப்புவழுவமைதியை மூவகையாகப் பிரித்துக் கூறலாம். அவை ஏவல், உற்றது உரைத்தல், உறுவது கூறல் என்பன. அம் மூன்றற்கும் முறையே நீயுண், வயிறுகுத்திற்று, வயிறு குத்தும் என்பன எடுத்துக் காட்டுக்களாகும். இங்ஙனம் அடக்கிக் கூறுதல் இளம்பூரணர் நச்சினார்க்கினியர் ஆகிய இருவருக்கும் கருத்தாம். 16 ஆம் நூற்பா ஒரு பொருளோடு ஒரு பொருளை ஒப்புமைப்படுத்தும் பொழுது ஒன்றினொன்று உயரலாம்; அல்லது தாழ்ந்ததாகலாம். அல்லது ஒரேவிதமாக (ஒப்புமையாக) இருக்கலாம். இம் மூன்றல்லது வேறுபடுதற்கில்லை. அம் மூன்றனுள் ஒன்றின் ஒன்று மிகுதலையும், தாழ்தலையும் ‘உறழ்பொரு’ என்றும், ஒன்றின் ஒன்று ஒப்புமையாதலைத் ‘துணைப்பொரு’ என்றும் கூறுவர் ஆசிரியர். பொரு என்பது ஒப்பு என்னும் பொருளைக் குறிக்கும். ஒருவன் ஒரு பொருளோடு ஒரு பொருளை உவமித்தோ அல்லது உறழ்ந்தோ வினாவினாலும், விடையிறுத்தாலும் சினைச் சொல்லிற்குச் சினைச்
|