சொல்லும், முதற் சொல்லிற்கு முதற் சொல்லுமே சொல்லல் வேண்டும் என்பது இந்நூற்பாவின் கருத்து ஆகும். 18 ஆம் நூற்பா ஒரு பொருளுக்குக் கொடுக்கப்படும் அடைமொழிகளில், சில அடைமொழிகள், அப்பொருட்கு இனமாய பொருளைச் சுட்டுதலும் உண்டு; சில இனமாய பொருளைச் சுட்டாமையும் உண்டு. அங்ஙனம் இனமாய பொருளைச் சுட்டாது வரும் அடைமொழிகளையுடைய பெயர்கள் செய்யுளின்கண் வருமேயன்றி வழக்கின்கண் வாரா என்பது இந்நூற்பாவின் கருத்து ஆகும். வெண்டாமரை என்புழி அத்தாமரைக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் வெண்மை என்னும் அடைமொழி ஏனைச் செந்தாமரை யுடைமையையும் சுட்டுதலின் அது இனச் சுட்டுடையதாம். செஞ்ஞாயிறு என்புழி அஞ்ஞாயிறு என்பதன்கண் உள்ள செம்மை என்னும் அடைமொழி ஏனைய ஞாயிறு இன்மையின் அது இனச்சுட்டில்லா அடைமொழியாம். செஞ்ஞாயிறு என்பதிலுள்ள செம்மை இனச்சுட்டில்லாப் பண்பு கொள் பெயராம். அவ்வடை மொழி இனத்தைச் சுட்டாமலும், செம்மையாகிய பண்பினைக் குறிக்கும் பெயராயும் இருத்தலின் அன்னதாயிற்று. கொடை என்பது அப்பெயரினை ஞாயிற்றுக்குக் கொடுத்துச் சொல்லுதல் என்னும் பொருள்படும். 19 ஆம் நூற்பா இயற்கைப் பொருளாவது காரணப்பொருள் எனக் கூறி அவை நிலம், நீர், தீ, வளி, விண், உயிர் எனக் கூறுகின்றார் தெய்வச்சிலையார். | “நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம்” |
என்ப ஆதலின், உலகத் தோற்றத்திற்கு அவை காரணமாயின. உடல் தோன்றுதற்கு உயிர் காரணம் ஆதலின், அதுவும் காரணப் பொருளாயிற்று. 20 ஆம் நூற்பா மண் தன் தன்மையினின்றும் திரிந்து குடம் ஆயினமையின் அது செயற்கைப் பொருளாயிற்று. அதன்கண் ‘ஆயிற்று’ என்பது ஆக்கச் சொல்லாம். இங்ஙனம் வரும் செயற்கைப் பொருளை ஆக்கச் சொல்லொடு படுத்துக் கூறுதலே மரபாம்.
|