பைங்கூழ் நல்ல மயிர் நல்ல என்புழி அவ்விரண்டிலும் ஆக்கச் சொல் இல்லாமைக்குக் காரணம் கூறுவாராகச் சேனாவரையர் அழகுபட ஒரு விரிவுரை தருகின்றார். அது வருமாறு:- “மயிர் நல்ல, பயிர் நல்ல எனச் செயற்கைப் பொருள் ஆக்கம் பெறாது வந்தனவா லெனின்:- அந் நன்மை பொருட்குப்பின் தோன்றாது உடன் தோன்றிற்றேல் இயற்கையேயாம்; அவ்வாறன்றி, முன் தீயவாய்ப்பின் நல்லவாயின வேனும், தீய நிலைமை காணாதான் மயிர் நல்ல, பயிர்நல்ல என்றாற்படும் இழுக்கென்னை? அது செயற்கையாவது உணர்ந்தான் ஆக்கங்கொடாது சொல்லினன்றே வழுவாவ தென்க.” இதுவே தெய்வச் சிலையாருக்கும் கருத்தாகும். 21 ஆம் நூற்பா செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறுக என முன் நூற்பாவாற் கூறினர். இனி அவ்வாக்கச் சொல்லும் செயற்கைப் பொருளுக்குக் காரணம் உள்வழியே கொடுக்கப்படும்; இல்வழி ஆக்கச் சொற் கூறப்படாது என்பது இந் நூற்பாவின் கருத்தாகும். இவ்வுரைப்படி முதற்று என்பது இன்றியமையாமை உடையது என்று பொருள்படும். ஆயினும் பிறவுரையாசிரியர்கள், செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறியவழிக் காரணத்தை முன்னும், ஆக்கச் சொல்லைப் பின்னும் கூறுக எனக் கூறினர். இவர்கள் கருத்தின்படி ‘முதற்று’ என்பது ‘முதற்கண்’ எனப் பொருள்படும். 22 ஆம் நூற்பா வழக்கினுள் ஆக்கச் சொல் காரணம் இல்லாமலும் வரும் என்பது இந் நூற்பாவின் கருத்து. இதுவே ஏனையுரையாசிரியர்களுக்கும் கருத்தாமேனும், ‘போக்கின்று’ என்ற சொற்குப் பொருள் உரைப்பதில் இவர் ஏனை யோரினின்றும் வேறுபடுவர். பிறரெல்லாம், போக்கின்று-குற்றமின்று என உரை கொண்டு, வழக்கினுள் ஆக்கச் சொல் காரணமின்றி வரினும் குற்றம் இன்று என உரைத்தனர். ஆனால் தெய்வச்சிலையார் போக்கின்று-போகுதலின்று; எனவே வரும் எனப் பொருள்கொண்டு, ஆக்கச் சொல் காரணமின்றியும் தான்வரும் என உரைத்தனர்.
|