வழக்கினுள் காரணம் இன்றியும் வரும் எனவே செய்யுளுள் காரணம் பெற்றே வரும் என உரைத்து அதற்கு உதாரணம் காட்டுவர் சேனாவரையர். அது வருமாறு:-- | “பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில் வலிய வாகுநின் தாள்தோய் தடக்கை” |
எனவும், “தெரிகணை யெஃகம் திறந்தவா யெல்லாம் குருதி படிந்துண்ட காகம்--உருவிழந்து குக்கிற் புறத்த சிரல்வாய் செங்கண்மால் தப்பியா ரட்ட களத்து” | (களவழி நாற்பது-5) |
“வருமழைய வாய்கொள்ளும் வாடாச்சீர் வண்கைக் கருமுருகன் சூடிய கண்ணி--திருநுதால் இன்றென் குரற்கூந்தற் பெய்தமையால் பண்டைத்தன் சாயல வாயின தோள்” |
எனவும் செய்யுட்கண் ஆக்கச் சொல் காரணம் பெற்று வந்தவாறு கண்டு கொள்க. ஆம் நூற்பா திணை துணிந்து பால்துணியாத ஐயப்பொருளை அவ்வத் திணைப்பன்மையாற் கூறுக என்பது இந் நூற்பாவின் கருத்து ஆகும். இந் நூற்பா உயர்திணைப்பால் ஐயத்திற்கே உரியது என்பர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும். உயர்திணை, அஃறிணை ஆகிய இருதிணையின்கண் வரும் பால் ஐயத்திற்கும் உரித்து என்பர் சேனாவரையரும் தெய்வச்சிலையாரும். 24 ஆம் நூற்பா ஒரு பொருள் உயர்திணையோ, அஃறிணையோ என ஐயம் நிகழ்ந்துழி, அவ்விரண்டிற்கும் உரிய பொதுச் சொல்லால் அவ்வையப் பொருளைக் கூறுதலே மரபாகும். அங்ஙனம் கூறும் சொல் ‘உருபு’ என்றும் இருக்கலாம்; அன்றி அஃறிணை ஒருமைப் பெயராகிய ‘அது’ என்றும் இருக்கலாம் என்பது இந் நூற்பாவின் கருத்தாகும். இதற்குப் பிற வுரையாசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பொருள் உரைத்தனர். அத்திறமெல்லாம் அவரவர் உரை நோக்கி யறிக.
|