எனவே, உயர்திணைச்சொல், அஃறிணைச்சொல் எனச் சொல் இருவகையாமென்பது பெறுதும், அஃதேல், திணையிடமாக, அத்திணைக்கட் பிறவற்றை யிசைத்தல் வேண்டுமெனின், ஒக்கும். அவ் விருதிணைக்கண்ணு முளவாகிய பாலினையே சொற்களிசைப்பன வென்ப. மேல் எழுத்ததிகாரங் கூறி, இனிச் சொல்லதிகாரங் கூறுவார், சொல்லாவ தித்தன்மையதென அதனிலக்கணங் கூற வேண்டுதலின், இச் சூத்திரம் முற்கூறப்பட்டது, அஃதற்றாக, தேவரை யறியுஞ்சொல் அஃறிணை யாகுமோ வெனின், அஃதாகாவாறு முன்னர்க் கூறப்படும். உயர் என நிற்பத் திணை யென வந்தசொல் எவ்வாறு வந்ததெனின், ஒரு சொன்முன் ஒரு சொல் வருங்கால், தொகைநிலை வகையான் வருதலும், தொகாநிலை வகையான் வருதலுமென இரண்டல்ல தில்லை. அவற்றுள் தொகைநிலை வகையான் வந்தன: யானைக்கோடு, பொன்மேனி, கொல்யானை, கருங்குதிரை, உவாப்பதினான்கு, பொற்றொடி என்பன. தொகாநிலை வகையான் வந்தன: சாத்தன் உண்டான், சாத்தனை வெட்டினான், உண்டான் சாத்தன், உண்டு வந்தான், நிலம் நீர் தீ வளி யாகாயம் என்பன. அவற்றுள் இது தொகைநிலை வகையான் வந்தது. தொகை தாம் பல: அவற்றுள் இஃதெத் தொகையான் வந்ததெனின் பண்புத் தொகையான் வந்த தென்க. மற்றுள்ள பொருளெல்லாவற்றினும் உயர் பொருளென விசேடித்து நின்றமையின், உயர்வான மென்றாற்போல வினைத்தொகை யாகாதோவெனின், வினையின் றொகுதி காலத்தியலும் (எச். 18) என்றாராதலின் ஈண்டுக் காலம் தோன்றாமையின் ஆகா தென்க. எற்றுக்கு? உயர்ந்த மக்கள், உயராநின்ற மக்கள், உயருமக்களென நல்வினை யேதுவாக மூன்று காலமும் கொண்டாலாகுமே யெனின், அவ்வாறு கருதுவார்க்கு வினைத்தொகையுமாம். உயர் பொருள் என்னாது திணையென்றது என்னை யெனின், அவ்வாறு ஆடல் வேண்டி ஆசிரியன் இட்டதோர் குறி யென்று கொள்க. என்மனார் என என்ப வென்னும் முற்றுச்சொல் திரிந்து நின்றது. குறைக்கும்வழிக் குறைத்தல் என்பதனான் பகாரம் குறைத்து, விரிக்கும் வழி விரித்தல் என்பதனான் மன்னும் ஆருமென இரண்டிடைச் சொற் பெய்து என்மனார் என்றாயிற்று எனப் பொருளுரைப்பவாலெனின், 1பகரங்குறைக்கின்றது செய்யுளின்பம் வேண்டியன்றே ஆண்டுக்குறைத்த வழிப் பின்னும் இரண்டெழுத்து விரிக்கல் வேண்டுமாயிற் குறைத்ததனாற் பயனின்மையின் இவ்வாறு எழுதும் உரை குற்றமென்க. இஃது எதிர்காலச் சொல்லாயினும் இறந்தகாலம் குறித்து நின்றது, இறப்பும் எதிர்வும் மயங்கப் பெறுமாகலின். அஃது ஆசிரியரென்னும் பெயர்கொண்டு முடியும். ஈண்டு அப்பெயர் எஞ்சி நின்றது. மக்களென்னாது சுட்டென்ற தென்னையெனின், மக்களாவார் ஒரு நீர்மைய ரன்றி, ஆணும் பெண்ணும் அலியுமாகிய வடிவு வேற்றுமையுடையராகலின், அவரெல்லார்மாட்டும் பொதுவாகக் கிடக்கும் மக்கட்டன்மையைக் குறித்து மக்களிவ ரென்னும் பொதுப்பொருண்மை உயர்திணையாவதென்பதறிவித்தற்குச் சுட்டென்றார். அவரல்லாத அஃறிணை யென்னாது, பிறவென்ற தென்னையெனின், மக்களல்லாதவென்றவழி, உயிருடையனவற்றையே சுட்டுமென் றையுற்று உயிரில் பொருளும் அஃறிணை என்ப தறிவித்தற்குப் பிறவென்றார்.
1. இளம்பூரணம். இறையனாரகப் பொருளுரை. சூ, 1.
|