‘உருவென’ என்பது இளம்பூரணருக்கும், நச்சினார்க்கினியருக்கும் பாடம். ‘உருபென’ என்பது தெய்வச்சிலையாருக்கும், சேனாவரையருக்கும் பாடம். உருவு என்பது வடிவைக் குறிக்கும். உருபு என்பது வேற்றுமையுருபு முதலாயினவற்றைக் குறிக்கும். ஆதலின் உருவு என்ற பாடமே சிறப்புடைத்து. இதுபற்றி நச்சினார்க்கினியர் உரைப்பது ஈண்டறியத்தக்கது. அது வருமாறு:-- ‘உருபு’ எனப் பகர உகரமாகப் பாடம் ஓதில் அது வேற்றுமை உருபிற்கும் உவம உருபிற்கும் பெயராய், வடிவை உணர்த்தாது என்று உணர்க. ‘அதுவென் உருபுகெட’ எனவும், ‘உருபினும் பொருளினும் மெய்தடுமாறி’ எனவும், ‘உருபு தொடர்ந்தடுக்கிய’ எனவும், ‘உருபு தொக வருதலும்’ எனவும், ‘மெய்யுருபு தொகா’ எனவும், ‘யாதன் உருபின்’ எனவும். பிறாண்டும் வேற்றுமைக்கு ‘உருபு’ என்றே சூத்திரஞ் செய்தவாறு காண்க. ‘உவம உருபு’ என்றல் அவ்வோத்திற் கூறிய உரைகளான் உணர்க. அன்றியும் சான்றோர் செய்யுட்களிலும் ‘உருவுகிளர் ஒளி வினை’ எனவும், ‘ஞாயிற்றுருவுகிளர் வண்ணங்கொண்ட’ எனவும், ‘உருவக் குதிரை’ எனவும், ‘வேண்டுருவங்கொண்டதோர் கூற்றங் கொல்’ எனவும் பிறாண்டும் கூறுமாற்றான் உணர்க. தெய்வச்சிலையார் ‘உருபு’ என்ற சொல்லே வடிவைக் குறிக்கும் என்பர். வேற்றுமைமயங்கியல் 22 ஆம் நூற்பா உரையையும், பெயரியல் 6 ஆம் நூற்பா உரையையும் காண்க. உருவு என்பதே வடிவைக் குறித்தற்குப் பொருந்தும். ஆதலின் தெய்வச்சிலையார் கருத்துப் பொருத்த மின்று. 27 ஆம் நூற்பா இந் நூற்பாவிற்கும், ‘இயற்பெயர் முன்னர் ஆரைக்கிளவி’ என்னும் நூற்பாவிற்கும் உள்ள வேற்றுமையை விளக்குகிறார் தெய்வச்சிலையார். ஆண்டு இயற்பெயர் ஒருமைப் பெயராய் நின்று பின் ஆர் என்னும் இடைச்சொல்லை ஏற்றது; ஈண்டு ஒருமைப் பெயரே (அவன் என்பது அவர் எனப்) பன்மைப் பெயராய் மாறி நின்றது; இவை தம்முள் வேற்றுமையாம். 29, 30 ஆம் நூற்பாக்கள் யாது என்னும் வினாச்சொல், அறியான் வினா, ஐய வினா, அறிவொப்புக் காண்டல் வினா ஆகிய மூன்றிடத்திற்கும் வரும் என்பது இவ்விரு நூற்பாக்களின் கருத்தாம்.
|