32 ஆம் நூற்பா இந் நூற்பாவிற்கு முதல் ஏட்டில் காணும் உரை பிறர் உரையில் காணாததாகும். மன்னாப் பொருள்-பொருந்தாப் பொருள். பொருந்தாப் பொருளைக் கூறுமிடத்து உம்மை கொடுத்துச் சொல்ல வேண்டும் என்பதே இந்நூற்பாவின் கருத்தாகும். எனினும் தெய்வச்சிலையார் பொருந்தும் பொருளையும், பொருந்தாப் பொருளையும் ஒருங்கு கூறுமிடத்தும், பொருந்தும் பொருளைத் தனித்துக் கூறுமிடத்தும் உம்மை கொடுத்துச் சொல்ல வேண்டும் என உரை காண்கின்றார். இந் நூற்பாவிற்கு இவ்வுரை அமையுமாறு ஆராயத்தக்கது. இந் நூற்பாவிற்கு இரண்டாம் ஏட்டில் காணும் உரை நச்சினார்க்கினியர் உரையோடு ஒத்ததாகும். மன்னாப் பொருள் என்பதற்கு இல்லாப் பொருள் என உரை காண்பவர் இளம்பூரணர், சேனாவரையர், கல்லாடர் ஆகிய மூவருமாவர். தெய்வச்சிலையார் இக்கருத்தை மறுப்பது போலவே நச்சினார்க்கினியரும் இதனை வன்மையாக மறுத்துரைப்பர். அதனை அவர் உரையான் அறிக. 33 ஆம் நூற்பா ஒருவன் ஒரு பொருளைக்கேட்க, அது தன்னிடத்து இல்லை யாயின் இல்லை என்று கூறலாம்; அங்ஙனமின்றி அல்லது என்னும் சொல்லொடு கூட்டி இல்லை எனக் குறித்தான் ஆயின் அவன் கேட்ட பொருளுக்கு இனமாய பொருளின் கண்ணேயே அச் சொல்லைவைத்துச் சொல்லவேண்டும் என்பது இந் நூற்பாவின் கருத்தாம். அல்லது என்னும் சொல்லைக் கேட்பான் கேட்கும் பொருளிலேயே வைத்துச் சொல்லின், (உழுந்துண்டோ எனக் கேட்பானுக்கு உழுந்தல்லது இல்லை எனில்) உழுந்து உண்டு, பிற இல்லை எனப் பொருள்பட்டுச் செப்பு வழுவாக முடிதலின், அதற்கு இனமாய பொருளின்கண் வைத்துச் சொல்லுதலே பொருந்துவதாகும். பிறிது பொருள் என்பதற்கு எல்லா வுரையாசிரியர்களும் இனப் பொருள் என்றே கூறவும், உலகியல் வழக்கும் அதுவாக இருக்கவும், சேனாவரையர் மட்டும் இனப் பொருள் கூறல் என்பதை மறுப்பர். அதனை நாகரீகமாக நச்சினார்க்கினியர் மறுத்துரைப்பர். அத்திறங்களை யெல்லாம் அவரவர் உரை நோக்கி யறிக. நன்னூலாரும், “தம்பா லில்ல தில்லெனின் இனனாய், உள்ளது கூறி மாற்றியும் உள்ளது, சுட்டியும் உரைப்பர் சொற்சுருங் குதற்கே” எனக் கூறுதல் காண்க.
|