6தொல்காப்பியம்[கிளவியாக்கம்]

6

உதாரணம் முன்னர்க் காட்டுதும்.

தேவரும் மக்களும் விலங்குமாகிய கதிப் பொருண்மை கூறி நரக கதிப் பொருண்மை கூறாததென்னை யெனின், அக்கதிமேனிகழ்வதோர் வழக்கின்மையிற் கூறாராயினர். நரகன் வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார், என வழங்குபவாலெனின், அக்கதியுட் டோன்றுவர் ஆணும் பெண்ணுமாகிப் போகம் நுகர்வரென்னும் இலக்கணமின்மையான், மக்களிற் றூய்மை யில்லாதாரை யுலகத்தார் வழங்குமாறவையென்க. நரகர் துயருழப்பர் என அக்கதிமேற்றோற்றுவார் மேலும் வருமாலெனின், அவ்வாறு வருவன பால் கூறப்படுதலின்றி ஆணும் பெண்ணும் வரையறுக்கப்படாத பொருளை உயிர்த்தன்மையைக் குறித்து உயர்திணைப் பன்மையான் வழங்கினாரென்க.

(4)

ஆண்பால் ஈறு

5. னஃகான் ஒற்றே ஆடுஉ அறிசொல்.

நிறுத்த முறையானே ஆடுஉ வறிசொல்லாமாறு
உணர்த்துதல் நுதலிற்று

இ - ள்.னகாரமாகிய ஒற்றை அந்தமாகவுடைய சொல் ஆண்பாலுணர வருஞ்சொல்,
எ - று.

ஏகாரம் ஈற்றசை. அந்தம் என்பது மேலைச் சூத்திரத்தினின்றுந் தந்துரைக்கப்பட்டது. இவ்வுரை வருகின்ற சூத்திரங்கட்கும் ஒக்கும்.

எ - டு. உண்டான், உண்ணாநின்றான், உண்பான் இவை வினைச் சொல். கரியன், நெடியன் இவை வினைக்குறிப்பு. பாண்டியன், மாயவன் இவை பெயர்.

அஃதேல் வினையியலுள்ளும், “அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும்-ஒருவர் மருங்கிற் படர்க்கைச்சொல்லே” (வினை சூ. 8) என ஓதுகின்றா ராகலின், ஈண்டுக் கூறுதற்குக் காரணம் என்னை யெனின். “வினையிற்றோன்றும் பாலறி கிளவியும் பெயரிற் றோன்று பாலறி கிளவியும், மயங்கல் கூடா” (சூ. 11) என வழூஉக் காக்கின்றாராகலின், அவை வழுவாமற் கூறுங்கால், அச்சொற்களின் இயல்பு அறிய வேண்டுமன்றே, அதற்காக ஈண்டுத் தோற்றுவாய் செய்தாரென்க. ஆண்மைப் பொருண்மைக்கண் வரும் பெயர்ச்சொற்கும் வினைச் சொற்கும் ஈற்றெழுத்துப் பலவுளவாயினும் அவையெல்லாங் கூறாது, னகரவொற்றொன்றனையுங் கூறினமையானும் தோற்றுவாய் செய்தவாறுணர்க. இவ்வுரை முன்வருகின்றவற்றிற்கும் ஒக்கும்.

(5)

பெண்பால் ஈறு

6. ளஃகான் ஒற்றே மகடூஉ அறிசொல்.

 மகடூஉ வறிசொல் உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்.ளகாரமாகிய ஒற்றை அந்தமாகவுடைய சொல் பெண்பால் உணரவருஞ் சொல், எ-று.