[கிளவியாக்கம்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்11

11

லாவது:--செத்தவன் பிறப்பானோ என்றவழி, பற்றறத் துறந்தானோ, பிறனோ என்றல், வினாவிவிடுத்தல் என்பது.--முட்டை மூத்ததோ பனை மூத்ததோ என்றவழி, எம்முட்டைக்கு எப்பனை என்றல், வாய்வாளாமையாவது:--ஆகாயப்பூ நன்றோ தீதோ என்றார்க்கு உரையாடாமை. (மணி - 30: 235 - 249)

இனி, அவற்றுள் வினா வழுவாவது வினாவியசொல்லாற் பயனின்றி நிற்பது. அஃது ஒருவிரல் காட்டி நெடிதோ குறிதோ என்றலும், ஆகாயப்பூ நன்றோ தீதோ என்றலும்.

செப்பு வழுவாவது:--துணிந்து கூறும்வழித் தோன்றியது கெடுமோ என்றார்க்குக் கெடாதென்றலும், ஒலி செவிக்குப் புலனன்று என்றலும், என் தாய் மலடி என்றலும், பிறவும் இந்நிகரனவும். இனிக் கூறிட்டு மொழியவேண்டும் வழியும், வினாவி விடுக்க வேண்டும்வழியும், வாளா திருக்கவேண்டும் வழியும் துணிந்துகூறின் வழுவாம். (வினாவின்றியும் வருதலிற் செப்பு முற்கூறப்பட்டது. அது யான் குமரியாடிப் போந்தேன், ஒரு படி சோறு தம்மின் எனவரும் (இ.ஏ.)

(13)

வினாச் செப்பாகவும் வருதல்

14.வினாவுஞ் செப்பே வினாவெதிர் வரினே.

செப்பின்கட் கிடந்ததோர் வழுவமைத்தலை நுதலிற்று.

இ - ள்.வினாவும் செப்பாம் நிலையைப் பெறும், வினாவப் பட்ட சொற்றன்னானே யெதிர்த்து வருமாயின், எ - று.

எ - டு. சாத்தா உண்ணாயோ என வினாயவழி, உண்ணேனோ என்பது உண்ணேன், உண்பல் எனச் செப்பாது உண்பன் என்னும் பொருள்படச் செப்பினமையான் வழுவமைதி யாயிற்று.

(14)

செப்பு வழுவமைதி

15.செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே
அப்பொருள் புணர்ந்த கிளவி யான.

இதுவும் அது

இ - ள்.செப்பு வழீஇயினும் நீக்கப்படாது, அச் செப்புதற்குப் பொருண்மையைப் பொருந்திய சொல்லின்கண், எ-று.

ஏகாரம் சிறப்புப்பற்றி வந்தது. அதிகாரப் புறநடையாற் கொள்ளப்படும்.

எ - டு.உண்ணாயோ சாத்தா என்றவழி, நீயுண் எனவும், வயிறுகுத்திற்று எனவும், வயிறு குத்தும் எனவும் இவ்வாறு வருவன. இவையும் உண்ணேன், உண்பல் என வாராமல் உண்ணென்னும் பொருள்பட வருதலின் வழுவமைதியாயின.

(15)

செப்பு, வினாவிற்குரிய மரபு

16.செப்பினும் வினாவினுஞ் சினைமுதற் கிளவிக்கு
அப்பொரு ளாகும் உறழ்துணைப் பொருளே.