செப்பு வருமாறு:--கயலிற் கண் நல்ல என்றானும், ஒக்கும் என்றானும் உரைப்பது. இனி, வழக்குப்பற்றி வினா வருமாறு:--கரிதோ வெளிதோ: இருப்பேனோ போவேனோ: ஊரோ காடோ: பகலோ இரவோ: எனவும், தேவராய் வாழ்தல் நன்றோ, நரகத்துள் உறைதல் நன்றோ எனவும், பிறவும் இவ்வாறு ஒன்றினொன்று பொருத்தமின்றி உலகவழக்கின்கண் வருவன கொள்க. செப்பு வருமாறு:--கரிதன்று வெளிதென்றானும், வெளிதன்று கரிதென்றானும் இவ்வாறே பிறவாற்றானும் உரைப்பன. இவை மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தின் வழுவுதலின் அமைதியாயிற்று. (17) செப்பில் இனச்சுட்டில்லாப் பொருள் மேல் வரும் வழுவமைதி 18. | இனச்சுட் டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே. |
உலகத்துப் பொருளெல்லாம் இனச்சுட்டுடையவும், இனச்சுட்டில்லவு மென இருவகைப்படும். அவற்றுள் இனச்சுட்டுடையன உறழ்ச்சி வகையுள் அடங்குதலின், இனச்சுட்டில்லாத பொருண்மேற் செப்பு வழீ இ யமையுமா றுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஒரு பொருட்கு இனச்சுட்டில்லாத பண்புகொள் பெயரைக் கொடுத்தல் வழக்குநெறியல்ல: செய்யுள் நெறி, எ - று. ‘பொருட்கு’ என்னும் வேற்றுமையேற்ற பெயர் எஞ்சி நின்றது. அல்லவென்பது வழக்குப்பன்மை குறித்து வந்தது. செய்யுணெறி யென அமையும், வழக்குநெறி யல்ல வெனல் வேண்டாவெனின், நன்கு1 மறுத்தற்குக் கூறினாரென்க. இனச்சுட்டில்லாத பொருளாவன -- ஞாயிறு, திங்கள், தீ யென்பன. அவை 2மாக்கடனிவந்தெழுசெஞ்ஞாயிற்றுக் கவினை எனவும், நெடுவண்டிங்களு மூர்கொண்டன்றே (அகம். 2) எனவும், வெவ்வெரி கொளீ இ எனவும் வரும். இவை வழக்கின்கண் வரின் கருஞாயிறும், கருந்திங்களும், தண்ணெரியும் உளபோலத் தோன்றும், ஆயினும் செய்யுட்கண் அமையும் என்றவாறு. செம்போத்து என வழக்கின்கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், அப்பொருட்கு அது பெயரென்க. பெருவண்ணான், பெருங்கொல்லன் என வழக்கின்கண் இனஞ்சுட்டாது வந்ததாலெனின், பண்பாவது தமக்குள்ள தோரியல்பு: ஈண்டப்பெருமையியல் பன்மையான், அஃது உயர்த்துச் சொல்லுதற்கண் வந்ததென்க. பண்புகொள் பெயர் என்று விசேடித்தமையால், ஏனைப் பெயர்கள் இருவகை வழக்கினும் இனஞ்சுட்டாது வரப்பெறுமெனக் கொள்க. (18)
1. மதித்தற்கு (இ.ஏ.) 2. புறநா. 4.
|