14தொல்காப்பியம்[கிளவியாக்கம்]

14

இயற்கைப் பொருள்மேல் செப்புநிகழுமாறு

19.இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல்.

உலகத்துப் பொருளெல்லாம் இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள் என அடங்குதலின், அவற்றுள் இயற்கைப் பொருண்மேற் செப்பு நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். இயற்கைப் பொருளென்பது காரணப் பொருள், அதனை இத்தன்மைத்து எனச் சொல்லுக, எ - று.

அவை நிலம் நீர் தீ வளி ஆகாயம் உயிர் என்பன. அவற்றை நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து, வளியுளரும், ஆகாயம் நிற்கும், உயிர் உணரும் எனக் கூறுக.

நிலம் வலிதாயிற்று எனக் கூறலாகாது. என்னை? ஆக்கங் கொடுப்பின் அதற்கு இயல்பு பிறிதாவான் செல்லு மாகலின் வழுவாம்.

(19)

செயற்கைப் பொருள்மேல் செப்புநிகழுமாறு

20.செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்

செயற்கைப் பொருண்மேற் செப்பு நிகழுமாறுணர்த்துதல்
நுதலிற்று

இ - ள்.செயற்கைப் பொருளாவது காரியப் பொருள்; அதனை ஆக்கச் சொல்லொடு படுத்துக் கூறுக, எ - று.

செயற்கையாய்த் தன்னியல்பின் வேறுபடுவன வெல்லாம் செயற்கைப் பொருளென்று கொள்க.

எ - டு. மண் குடமாயிற்று, நூல் ஆடையாயிற்று, மரங் கதவாயிற்று எனவும்; பைங்கூழ் நல்லவாயின. மயிர் நல்லவாயின எனவும் வரும்.

அஃதேல், பைங்கூழ் நல்ல, மயிர் நல்ல என ஆக்கமின்றியும் வருமால் எனின், அவை யக்காலத்தியற்கைபற்றிக் கூறப்பட்டன; முன்பு நின்ற நிலைகண்டு கூறப்பட்டன அல்லவென்க. அதனானேயன்றே வருகின்ற சூத்திரங் கூறவேண்டியது.

(20)

மேலதற்கோர் புறனடை

21.ஆக்கந் தானே காரண முதற்றே.

மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். மேற் சொல்லப்பட்ட ஆக்கக் கிளவி காரணத்தை முதலாகவுடைத்து, எ - று.

செயற்கைப் பொருளெல்லாம் ஆக்கங்கொடுத்துக் கூறப்படா; காரணமுள் வழியே ஆக்கங் கொடுப்ப தென்றவாறாயிற்று.

(21)