பொதுவினையால் இயம்பினார் என்க. பிறவும் அன்ன. (44) இதுவும் அது 45. | 1எண்ணுங் காலை யதுவதன் மரபே. |
மேலதற்கு எய்துவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். வேறு வேறு வினையையுடைய பொருளைப் பொதுப் பெயராற் கூறுதலன்றி எண்ணுமிடத்தும் அதன் மரபு பொது வினையாற் கிளத்தல், எ - று. எ - டு. அம்பும், வேலும், தண்டும், வாளும் வழங்கினார் என்க. எறிந்தார் எய்தார் என ஒரு வினையாற் கிளவற்க. ஊன்றுவை-கறிசோறுண்டு வருந்துதொழில் அல்லது பிறிதுதொழி லறியா வாகலின் (புறநா - 14.) என்றவழி உண்டு என ஒரு வினையான் வந்ததால் எனின், அது பொதுவினை என்று கொள்க. என்னை? உண்ணுநீர் வேட்டேன் என வந்தாற்கு (கலி - குறி. 15) எனவும், பாலுமுண்ணாள் பழங்கண் கொண்டு (அகம் - 48) எனவும், கலைப்புற வல்குல் கழுகுகுடைந்துண்டு (மணிமே - 6, சக் - 112) எனவும், கள்ளுண்ணாப் போழ்து (குறள்-930) எனவும், உண்ணாமை வேண்டும் புலா அல் (குறள்-257) எனவும் வருதலின். (45) இரட்டைக் கிளவி 46. | இரட்டைக் கிளவி 2இரட்டிற் பிரிந்திசையா. |
இது செப்பு வழுக்காத்தலை நுதலிற்று இ - ள். இரட்டித்துச் சொல்லப்படும் சொற்கள் அவ்விரட்டித்தலிற் பிரிந்து ஒலியா, எ - று. எ - டு. ஒன்றொன்றாக வந்தன. இரண்டிரண்டாக நீக்குக என வரும். இவை ஒன்றாக வந்தன. இரண்டாக நீக்குக என்ற வழிப் பொருண்மைப் படாமையால் பிரிந்தொலியா வாயின. (46) ஒரு பெயர்ப் பொதுச் சொல்லைச் சொல்லும் முறைமை 47. | 3ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத் தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும். |
1. எண்ணுங்காலும் அதுவதன் மரபே, என்பதும் பாடம். இதுவே பிற உரையாசிரியர்கள் அனைவரும் கொண்ட பாடம். 2. இரட்டுப் பிரிந்திசையா என்பது இளம்பூரணர் பாடம். 3. இளம்பூரணர் முதலியோர் அடுத்த சூத்திரத்தின் முதல் வரியை இதனொடு சேர்த்துள்ளார்கள். இச்சூத்திரங்களின் உரைப்போக்கும் வேறுபடுகின்றது.
|