மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். தெரிந்து வேறுபடுக்கவருஞ் சொல்லைக் கிளந்துரைத்தலே யன்றி, குறித்தோன் கூற்றமும் ஆம், எ - று. உம்மும் ஆமும் எஞ்சி நின்றன. எ - டு. நிவந்தோங் குயர்கொடிச் சேவலோய் (பரி; 3 : 18) என்றவழிச் சொல்லுவான் குறிப்பு மாயவனை நோக்கலிற் கருடனாயிற்று. சேவலங் கொடியோன் காப்ப (குறு - 1) என்றவழிச் சொல்லுவான் குறிப்பு முருகவேளை நோக்குதலிற் கோழியாயிற்று, பிறவும் அன்ன. (54) சில உயர்திணைப் பெயர் அஃறிணை முடிபு கோடல் 55. | குடிமை யாண்மை இளமை மூப்பே அடிமை வன்மை விருந்தே குழுவே பெண்மை யரசே மகவே குழவி தன்மை திரிபெயர் உறுப்பின் கிளவி காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென்று ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ அன்ன பிறவும் அவற்றொடு சிவணி முன்னத்தின் உணருங் கிளவி யெல்லாம் உயர்திணை மருங்கின் நிலையின வாயினும் அஃறிணை மருங்கிற் கிளந்தாங் கியலும். |
திணை வழுவமைதி யுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். குடிமை முதலாக எண்ணப்பட்டனவும், அத்தன்மைய பிறவும் அவற்றொடு பொருந்திக் குறிப்பினான் உணருங் கிளவி யெல்லாம் உயர் திணை மருங்கில் நின்றன வாயினும் அஃறிணையிடத்துச் சொல்லான் வழங்கப்படும், எ - று. உயர்திணை மருங்கின் நிலையினவாயினும் என்ற உம்மையான் இவையெல்லாம் பண்பு குறித்தவழி அஃறிணையாம் என்பதூஉம், பொருள் குறித்தவழி உயர்திணையாம் என்பதூஉம் கூறியவாறாயிற்று. குடிமையாவது குடியாகிய தன்மை, அது அக்குடியிற் பிறந்தாரைக் குறித்து நின்றது. இக்குடி வாழ்ந்தது, இக்குடி கெட்டது என்ப. குடிமை என்பது குடி என வருமோ எனின் “மடிமை குடி மைக்கட்டங்கிற்றன் னொன்னார்க்(கு)--அடிமை புகுத்தி விடும்” (குறள் 608) என்றவழிக் குடி எனப் பொருளாகியவாறு கண்டுகொள்க. ஆண்மை யென்பது ஆணாகிய தன்மை; அத்தன்மையைக் குறித்து ஓர் ஆண் வந்தது என்ப. இளமை யென்பது இளையாரைக் குறித்து நிற்கும், இவ்வவை இளமையின்று என இளையாரை இலது என்னும் பொருள்பட வந்தது.
|