மூப்பு என்பது முதியாரைக் குறித்து நிற்கும். இவ்வவை மூப்பு இன்று என முதியாரை இலது என்னும் பொருள்பட வந்தது. அடிமை என்பது அடிமைத் தொழில் செய்வார் மேற்று. அவன தடிமை வந்தது என அப்பொருள் குறித்து நின்றது. வன்மை யென்பது வலியாகிய தன்மை. அவனது வலி போயிற்றென அவற்குத் துணையாயினாரைக் குறித்து நின்றது. விருந்து என்பது புதுமை, விருந்து வந்ததென, புதியார் வந்தார் என்பது குறித்து நின்றது. குழூஉ என்பது திரள். குழூஉப் பிரிந்தது, அவை எழுந்தது, படை திரண்டது என்ப குழுவிய மாந்தரைக் குறித்து. பெண்மை என்பது பெண்ணாகிய தன்மை. ஒரு பெண் வந்தது என்ப. அரசு என்பது அரசத்தன்மை, அரசிருந்தது என்ப அரசன் என்பதைக் குறித்து. மக என்பது மகன், மகள் என்னும் முறைப்பெயர் இரண்டற்கும் பொதுவாக நிற்பது. மகக் கிடந்தது என்ப. குழவி என்பது அப்பொருளின் இளமை குறித்து நிற்கும். குழவி அழுதது என்ப. தன்மை திரிபெயர் என்பது தன் இயல்பிற் றிரிந்த பொருட்பெயர். அதுமருள் என்பது. அதனை மருள் வந்தது என்ப. உறுப்பின் கிளவி என்பது உறுப்பினாற் கூறப்படும் சொல். அஃதாவது குருடு முடம் என்பன. குருடு வந்தது, முடம் வந்தது என்ப. காதல் என்பது காதல்பற்றி நிகழுஞ் சொல். காதற்சொல் சிறப்புச் சொல் என ஒரு சொல் வருவிக்க, என் பாவை வந்தது, என் யானை வந்தது என்ப. தன் மக்களை ஈங்கிதோர் நல்கூர்ந்தார் செல்வமகள் (கலி. 56) என்றவழி இது என்பது காதல்பற்றி வந்தது. சிறப்பு என்பது சிறப்பைப்பற்றி வருஞ்சொல், ‘கண்போலச் சிறந்ததனை என்கண் வந்தது என்ப. செறற் சொல் என்பது செறலினாற் கூறுஞ் சொல். என்பகை வந்தது, திருவிலி வந்தது என்ப. ஏஏ இஃதொத்தன் (கலி. 62) என்றவழி இஃதென்பதும் அது. விறற் சொல் என்பது வீரியத்தாற் கூறுஞ்சொல், விறல் வந்தது, சிங்கம் வந்தது, புலி வந்தது என்ப அவ்வீரியங்குறித்து. அன்ன பிறவும் என்றதனால், குடும்பம் வாழ்ந்தது, வேந்து சென்றது, ஆள் வந்தது, அமைச்சு வந்தது, தூது வந்தது, ஒற்று வந்தது, நட்பு நன்று என்பன கொள்க.
|