எனப் பாலுணர நில்லாத தெய்வப் பொருண்மையும் கொள்ளப்படும். உதாரணம் 1முன்னர்க்காட்டுதும். (56) மேலதற்கோர் புறநடை 57. | நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே. |
மேலதற்கோர் புறநடையுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேல் உயர் திணைக்கட் பால் பிரிந்திசையா என்று ஓதப்பட்டன வெல்லாம் அத்திணை யுணர நின்றனவேனும். அவ்வாறு உயர்திணை யுணரநின்று ஒலித்தல் இவ்விடத்து வழக்கின்று, எ - று. இவ்விடம் என்றது உயர்திணையை. (57) இதுவும் அது 58. | இசைத்தலும் உரிய வேறிடத் தான. |
மேற்கூறப்பட்ட சொற்கள் பாலுணர வருமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழுவமைதியும் ஆம். வேறிடம் என்பது அஃறிணையை. இ - ள். மேல் பால் பிரிந்திசையா என ஓதப்பட்ட சொற்கள் அஃறிணையாய் இசைத்தலும் உரிய, எ-று. உம்மை எச்சவும்மை ஆகலான் அஃறிணைக்குரிய சொல்லான் அன்றி இருதிணைக்கும் பொதுவாகி சொல்லானும் இசைத்தலும் உரிய, எ-று. எ - டு:- காலம் வந்தது, வரும். உலகு கிடந்தது. உயிர் போயிற்று, உடம்பு விட்டது. தெய்வம் தந்தது. வினை விளைந்தது. பூதம் செறிந்தது. ஞாயிறு எழுந்தது. திங்கள் எழுந்தது. சொல் பயன் தந்தது. வியாழம் எழுந்தது. வெள்ளி பட்டது. பரணி தோன்றிற்று. பூதம் புடைத்தது. பேய் பிடித்தது. பிறவும் அன்ன. (58) அடைமொழி இனம்செப்பல் 59. | எடுத்த மொழிஇனஞ் செப்பலும் உரித்தே. |
இது செப்பின்கட் கிடந்ததோர் குறிப்பு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். எடுத்துச் சொல்லப்பட்ட சொல் தனக்கு இனமாகிய பொருளைச் சொல்லுதலும் உரித்து. எ-று. உம்மையாற் சொல்லாமையும் உரித்து, எ-று. தென்சேரிக் கோழி வென்றது என்றவழி, வடசேரிக் கோழி தோற்றது என்னும் பொருளும் காட்டி நின்றது. இது இனம் செப்பியது.
1. 57 ஆம் சூத்திரம்.
|