[கிளவியாக்கம்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்35

35

அந்தணர் வாழ்க என்றவழி, அரசரும் வணிகரும் கெடுக என்றவாறன்றி, அந்தணரையே குறித்து நின்றது. இஃது இனம் செப்பாது வந்தது.

இன்னும் இச்சூத்திரத்தின்கண் இனம் செப்பலும் உரித்து என்றதனாலே இனமல்லாதன செப்பலும் உரித்து என்று கொள்ளப்படும். அவ்வாறு வருவன ஏற்புழிக் கொள்க. சுமந்தான் வீழ்ந்தான் என்றவழி,சுமவாதவன் வீழ்ந்திலன் என்னும் பொருள்படுதலே யன்றிச் சுமக்கப் பட்டதும் வீழ்ந்ததெனச் செப்பியவாறுங் கண்டு கொள்க. பிறவும்அன்ன.

(59)

பன்மைச் சொற்கள் ஒருமையொடு முடிதல்

60.கண்ணுந் தோளும் முலையும் பிறவும்
பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
பன்மை கூறுங் கடப்பா டிலவே
தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே.

ஒருசார் பாலறிசொற்கட் கிடந்ததோர் மரபு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். கண்ணும், தோளும், முலையும், அத்தன்மைய பிறவும் ஆகிய பன்மை சுட்டிய சினை உணர வருஞ்சொல், தம் வினைக்கேற்ற எழுத்தான் முற்றுப்பெறாதவழிப் பன்மை யுணர்த்தும் மரபில, எ - று.

எனவே, பன்மை ஈற்றான் வாராக்கால் ஒருமை ஈற்றான் வரப்பெறும் என்பதூஉம், அவ்வழி அவ்விரு பொருட்கண்ணும் கிடப்பதொரு பொதுமையைக் குறிக்கும் என்பதூஉங் கொள்ளப்படும். கண் நொந்தது, முலை எழுந்தது, தோள் தசைந்தது என்றவழி, பன்மை யுணர்த்திற்றில வாயினும் அச்சாதியொருமையை உணர்த்தியவாறு கண்டு கொள்க. பிறவும் என்றதனால், கை, கால் என்பனவுங் கொள்க. இருநோக் கிவளுண்கண் உள்ளது (குறள்-1091) என்றவழி நோக்காகிய ஒருமை குறித்து வந்தது. ஒப்பக்கூறல் என்னும் தந்திர உத்தியால், சினைப்பொருளேயன்றி முதற்பொருளும் சாதியொருமை பற்றி வருவனவும் அமைத்துக் கொள்க. உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தான், உள்ளான் வெகுளி யெனின் (குறள், 309) இதனுள் உள்ளியவெல்லாம் எனற்பாலது நினைக்கப்படுதல் ஆகிய ஒருமைகுறித்து வந்தது. அஃதேல் கண்ணல்லன் என்பது எவ்வாறு வந்ததெனின்கண்ணது நன்மையுடையன் என்னும் பொருள்பட வந்தது. கண் நொந்தான் என்பது எவ்வாறு வந்ததெனின், கண் நோவப்பட்டானெனச் செயப்படுபொருள் குறித்து நின்றது. இவை வினையியலுட் காணப்படும்.

(60)

முதலாவது கிளவி யாக்கம் முற்றும்.
________