2. வேற்றுமை 1யியல்
வேற்றுமையின் தொகை 61. | 2வேற்றுமை தாமே ஏழென மொழிப விளிகொள் வதன்கண் விளியோ டெட்டே. |
இஃது என்ன பெயர்த்தோ எனின், வேற்றுமை யியல் என்னும் பெயர்த்து: பொருள்களை வேறுபடுத்தினமையாற் பெற்ற பெயர். என்னை வேறுபடுத்தியவாறு எனின், ஒரு பொருளை யொருகால் வினைமுதலாக்கியும், ஒருகாற் செயப்படு பொருளாக்கியும், ஒருகாற் கருவியாக்கியும், ஒருகால் ஏற்பது ஆக்கியும், ஒருகால் நீங்க நிற்பது ஆக்கியும், ஒருகால் உடையது ஆக்கியும், ஒருகால் இடம் ஆக்கியும் இவ்வாறு வேறு படுத்தது என்க. மேல் அல்வழித் தொடர் கூறி இனி வேற்றுமைத்தொடர் கூறுகின்றார் ஆதலின் அதன்பின் கூறப்பட்டது. இவ்வோத்தினுள், தலைச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின், வேற்றுமை இனைத்தென வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். வேற்றுமை என்பனதாம் ஏழென்று சொல்லுப ஒரு சாரார்; விளி கொள்வதன்கண் நிகழும் விளியோடு எட்டாம், எ - று. ஏகாரம் தேற்றம். விளி கொள்வது என்றது பெயரை. ஏழென்று சொல்லுவார் விளி வேற்றுமையை எழுவாயுள் அடக்குவார். (1) வேற்றுமைகளின் பெயரும் முறையும் 62. | அவைதாம், பெயர் ஐ ஒடு கு இன்அது கண்விளி யென்னும் ஈற்ற. |
வேற்றுமைச்சொற்கு ஈற்றெழுத்து வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்ட வேற்றுமைகள் தாம் பெயர் ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி யென்று சொல்லப்பட்ட ஈ.றுகளையுடைய, எ-று. விளி யீறாவது விளிக்கண் வரும் எழுத்துக்கள். பிறவும் வேற்றுமை ஈறு உளவாயினும் சிறப்புடைப் பொருளைத் தானினிது கிளத்தல் என்பதனால் இவை
1. ஒத்து என்றும் பாடம். 2. இதனை இளம்பூரணர் முதலோர் இரண்டு சூத்திரங்களாகக் கொள்வர்.
|