என்பதனால் இவை எடுத்து ஓதப்பட்டன. எடுத்தோதாதன, மூன்றாவதன்கண் ஆன் ஆல் ஓடு; ஆறாவதன்கண் அ; ஏழாவதன்கண் இடப்பொருண்மை உணர்த்துஞ் சொற்கள். எ - டு. சாத்தன், சாத்தனை, சாத்தனொடு, சாத்தற்கு, சாத்தனின், சாத்தனது, சாத்தன்கண், சாத்தா எனவரும். ஐ முதலாயின மற்றொரு பெயர்க்கு ஈறாகி வருதலின், பெயரீறு என்பது விளங்கும். அங்ஙனமே பெயரும் மற்றொரு பெயர்க்கு ஈறாகி வரல் வேண்டும் எனின் அஃதன்று கருத்து. பெயர்தானே ஈறாகியும், பிற எழுத்தோடு கூடி ஈறாகியும் வருமென்று கொள்ளப்படும். இவ்வேற்றுமைகளை இவ்வீற்று வேறுபாட்டானே, பெயர் வேற்றுமை, ஐகார வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ் வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை கண் வேற்றுமை. விளி வேற்றுமை எனவும் குறியிட்டு வழங்குப. அஃது யாண்டுப் பெறுதும் எனின், ஐ யெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (சொல். 68) ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி (சொல். 70) என்புழியும் பிறாண்டும் பெறுதும். (2) எழுவாய் வேற்றுமை 63. | அவற்றுள், எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே. |
மேல், வேற்றுமை எட்டு என்பதும், அவற்றுக்கண் வரும் ஈறும் கூறினார் அல்லது, அவற்றது பெயரும் முறையும் கூறிற்றிலர் அன்றே, அவை கூறுவார், முற்பட, முதல் வேற்றுமையாவது இஃது என்பது உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். மேற் சொல்லப்பட்டவற்றுள் முதல் வேற்றுமையாவது பெயர் தோன்றும் நிலை, எ - று. அஃதேல், பெயர் என அமையும், தோன்றும் நிலை என்றதனாற் பயன் என்னை யெனின், பெயர் கண்டுழியெல்லாம் வேற்றுமை யென்று கொள்ளற்க என்பது அறிவித்தற்கெனக் கொள்க. அஃது யாதோ எனின், ஆயன் சாத்தன் வந்தான் என்றவழி ஆயன் என்பது சாத்தற்கு அடையாகி நிற்றலானும், வருதற்றொழில் சாத்தனொடு முடிதலானும், இருபெயரும் ஒரு பொருட்கண் வருதலின் இரண்டினையும் வேற்றுமை எனப்படாது ஆகலானும் இறுதி நின்றதே வேற்றுமை எனப்படுவது என்று கொள்க. இதனை எழுவாய் வேற்றுமை யடுக்கென்றார் உளரால் எனின், ஆயன் சாத்தனை வெட்டினான் என்ற வழி, இறுதி நின்ற பெயர் உருபேற்று இரண்டாம் வேற்றுமையாயிற்று. ஆண்டு உருபு ஏலாத ஆயன் முதல் வேற்றுமை யாதல் வேண்டும். அவ்வாறாக, வெட்டினான் என்பது ஒற்றுமைப்பட்டு முடியாதாகலான்அது பொருளன்று என்க. அஃதற்றாக, பெயரை முதல் வேற்றுமை என்னாது, எட்டு வேற்றுமையுள்ளும் யாதானும் ஒன்றை முதல் வேற்றுமை எனினும் அமையும் எனின். ஒருவன் ஒன்றை ஒன்றானே யியற்றி ஒருவற்குக் கொடுப்ப, அவன் அதனை அவனினின்றும் தனது ஆக்கி ஓரிடத்து வைத்
|