38தொல்காப்பியம்[வேற்றுமையியல்]

38

தான் கொற்றா என்ற வழி, செய்கின்றான் முதல் வேற்றுமையாகி இம்முறையே கிடத்தலின் அமையாது என்க.

அஃதேல், யாற்றினது கரைக்கண் நின்ற மரத்தை அறச்சாலை யியற்றுதற்கு ஊரினின்றும் வந்து மழுவினானே வெட்டினான் சாத்தன் என்றவழி. எழுவாயாகிய பெயர் ஏழாவதுமாய் நின்றதால் எனின், சொல்லுவான் குறிப்பினான் முதல் வேற்றுமையாயிற்று என்பது கருத்து. யாதானும் ஒரு தொழிலும் செய்வான் உள்வழி அல்லது நிகழாமையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப்பட்டான். அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத்தகுவது இது எனக் குறிக்கவேண்டுதலின் செயப்படுபொருள் இரண்டாவது ஆயிற்று. அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்காங் கருவி தேடுமாதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று. அவ்வாறு, செய்து முடித்த பொருளைத் தான் பயன்கோடலே யன்றிப் பிறர்க்குங் கொடுக்கும் ஆதலின் அதனை ஏற்று நிற்பது நான்காவது ஆயிற்று. அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப்பொருள் நீங்கி நிற்பது ஐந்தாவது ஆயிற்று. அவ்வாறு நீங்கின பொருளைத் தனதென்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று. ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும் இடமும் காலமும் பொதுவாகி நிற்றலின், அவை ஏழாவது ஆயின. இவையிற்றோடு ஒத்த இயல்பிற்று அன்றி எதிர் முகம் ஆக்குதற்பொருட்டு ஆகலின், விளி என்பது எல்லாவற்றினும் பிற் கூறப்பட்டது.

அஃதேல் ஆறாவதாகிய கிழமை, கொண்டான்கண்ணாதலேயன்றிச் செய்தான்கண் இயையாதோவெனின் தோற்றுவித்தாற்குக் கிழமை சொல்லாமலும் பெறும், அதனைக் கொண்டாற்கே கிழமை கூறல் வேண்டுவது என்க.

(3)

எழுவாய் பயனிலை ஏற்குமாறு

64.பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்.
வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல்
பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்
றன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே.

 எழுவாய் வேற்றுமைக்கு முடிபு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். பொருண்மை சுட்டல் என்பது, முடிக்குஞ்சொல் எழுவாயாகி நின்ற பொருடன்னையே சுட்டி, அதன் தொழில் முதலாயின சுட்டாது நிற்கும் நிலைமை, எ - று.

எ - டு. சாத்தன் உளன் எனவரும்.

வியங்கொள வருதலாவது தொழிலைப் பெயர்ப்பொருண்மை கொள்ளுமாறு வரும் ஏவற்சொல்.

எ - டு. சாத்தன் செல்க.

வினைநிலை யுரைத்தலாவது அப் பொருளின் தொழிலின் நிலைமையை உணர்த்தவருஞ் சொல்.