இச் சூத்திரங் கூற வேண்டா; மேலைச் சூத்திரத்துப் பெயர் ஐ ஒடு கு இன் அது கண் விளி யென்னும் ஈற்ற என்பதனாற் பெறுதும் எனில், அது கருதியன்று கூறியது: வடமொழிக்கண் எழுவாயாகிய பெயர் ஈறுகெட்டு உருபேற்கும். அவ்வாறன்றித் தமிழ்மொழிக்கண் ஈறுதிரியாது எழுவாயாகிய பெயரின் மேலே உருபுநிற்கும் என்பது அறிவித்தற்கெனக் கொள்க. உதாரணம் மேற்காட்டப்பட்டன. வருகின்ற சூத்திரத்தின் கண்ணும் விளங்கும். (7) பெயர்க்குரிய இலக்கணம் 68. | பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா தொழில்நிலை யொட்டும் ஒன்றலங் கடையே. |
மேற்பல சூத்திரத்தானும் பெயர் என்று எடுத்தோதிப்போந்தார் அஃது இத்தன்மையதென அதன் இலக்கணங்கூறுதல் நுதலிற்று. இ - ள். பெயர் நிலைமையுடைய சொல் காலம் தோன்றா; தொழில் நிலையோடு ஒட்டி நிற்கும் பெயரும் ஒருவகையல்லன காலம் தோன்றா, எ - று. காலம் தோன்றா என்றது மத்திம தீபமாகி நின்றது. உம்மை இறந்தது தழீஇயிற்று. பெயர்க்கு இலக்கணம் பயனிலை கோடலும், உருபு ஏற்றலும், காலந்தோன்றாமையும் ஆம். அவற்றுள், பயனிலை கோடலும், உருபேற்றலும் முற்பட்ட சூத்திரத்தாற் கூறலின் இதனால் காலந்தோன்றாமை கூறப்பட்டது. பெயராவன--தனிப்பெயர், ஒட்டுப்பெயரென இருவகைப்படும். அவற்றுள் தனிப்பெயர்-பொருள்மேல் வருவனவும், தொழில் மேல் வருவனவும் என இருவகைப்படும். ஒட்டுப்பெயர் தெரிநிலைவினை யொட்டுப் பெயரும், குறிப்புவினை யொட்டுப் பெயரும் என இருவகைப்படும். அவற்றுள் பொருள் மேல் வரும் தனிப்பெயர்-சாத்தன், கொற்றன், யானை, குதிரை, மா, தெங்கு என்பன, தொழில் மேல் வரும் தனிப் பெயர்-உண்டல், தின்றல், கொடுத்தல், எடுத்தல், என்பன, தெரிநிலை வினை யொட்டுப் பெயராவன--தொழிற்பெயரோடு ஒட்டி ஒருபொருட்குப் பெயராகி வருவன. அவை--உண்டான், தின்றான், கொடுத்தான், எடுத்தான் என்பன. இவை வினைக்கருத்துள்வழி வினைச் சொல்லாம், பெயர்க் கருத்துள்வழிப் பெயராம், குறிப்புவினை யொட்டுப் பெயராவன--மற்றொரு பெயரோடு ஒட்டி யொரு பொருட்குப் பெயராகி வருவன. அவை குழலன், கோட்டன், கச்சினன், கழலினன் என்பன. இவையும் வினைக்கருத்துள்வழி வினைக் குறிப்பாம், பெயர்க்கருத்துள்வழி பெயராம். இவற்றுள் தெரிநிலை வினை ஒட்டுப் பெயரல்லாதன காலந்தோன்றா. இப்பெயர்கள்--சாத்தனை, உண்டலை, உண்டானை, குழலனை என உருபேற்கும். (8)
|