ஐந்தாம் வேற்றுமை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். ஐந்தாம் வேற்றுமையாவது இன் என்று பெயர் கொடுத் தோதப்பட்ட வேற்றுமைச்சொல். அஃது இப்பொருளின் இத்தன்மைத்து இப்பொருள் என உணர்த்தும். எனவே இவ்வாய்பாட்டான் வரும் பொருண்மை யெல்லாம் ஐந்தாவதாம், எ - று. அவையாவன;-நீங்க நிற்பதூவும், பொருவும், ஏதுவும் என்பன, அவற்றுள் நீங்க நிற்பது பொருள் நீங்கி நிற்பதூஉம். இடம் நீங்கி நிற்பதூஉம் என இருவகைப்படும். பொருவும் மிகுதலும், குறைதலும், ஒத்தலும் என மூன்று வகைப்படும், அவற்றுள் பொருவும், ஏதுவும் வருகின்ற சூத்திரத்தால் கூறுதலானும், பல்பொருட் கேற்பின் நல்லதுகோடல் என்பதனானும் இச்சூத்திரம் நீங்க நிற்பது குறித்ததென்பது கொள்ளப்படும். எ - டு. வரையினின்றும் வீழாநின்றது அருவி. (15) ஐந்தாவதன் பொருள்பற்றி வரும் வேறுபாடு 76. | வண்ணம் வடிவே அளவே சுவையே தண்மை வெம்மை அச்சம் என்றா நன்மை தீமை சிறுமை பெருமை வன்மை மென்மை கடுமை யென்றா முதுமை இளமை சிறத்தல் இழித்தல் புதுமை பழமை ஆக்கம் என்றா இன்மை யுடைமை நாற்றம் தீர்தல் பன்மை சின்மை பற்று விடுதலென் றன்ன பிறவும் அதன்பால என்மனார். |
இதுவும் ஐந்தாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். வண்ணம்முதலாகப் பற்றுவிடுதல் ஈறாக ஓதப்பட்டனவும், அத்தன்மைய பிறவும் ஐந்தாம் வேற்றுமைப் பாலன, எ - று. யாதானும் ஒன்றைப் பொருவிக் கூறும்வழி. பண்பினானாதல், தொழிலினானாதல், பொருளினானாதல் கூறல் வேண்டுதலின், அவையெல்லாம்எடுத்தோதப்பட்டன. எ - டு. இதனிற்கரிது, இதனின் வட்டம், இதனின் நெடிது, இதனிற் கைக்கும், இதனிற் றண்ணிது, இதனின் வெய்து, இதனின் அஞ்சும், இதனின் நன்று, இதனிற்றீது, இதனிற் சிறிது இதனிற் பெரிது, இதனின் வலிது, இதனின் மெலிது, இதனிற் கடிது, இதனின் முதிது, இதனின் இளைது,
|