| தெரிந்துமொழிச் செய்தியின் நிலையின் வாழ்ச்சியின் திரிந்துவேறு படூஉம் பிறவு மன்ன கூறிய மருங்கில் தோன்றுங் கிளவி ஆறன் பால என்மனார் புலவர். |
இஃது ஆறாம் வேற்றுமைப் பொருள் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. இ - ள். இயற்கை முதலாக வாழ்ச்சி யீறாக எண்ணப்பட்ட கிழமையினும். திரிந்து வேறுபடூஉம் பிறவற்றினும், அத்தன்மையவாகி மேற்சொல்லப்பட்ட இதனது இது எனும் பொருள் தோன்றும் சொல்லெல்லாம் ஆறாம் வேற்றுமைப் பாலன, எ - று. மேலைச்சூத்திரத்தான், உடையானும் உடைப்பொருளுமாகிய கிழமை எடுத்தோதினார்; இச்சூத்திரத்தான் அதனின் வேறுபட்டு வருவன எடுத்தோதினார் என்று கொள்க. இயற்கை என்பது இயல்பாகிய கிழமை. அஃதாவது பொருட்கு இயல்பாகிய பண்பு. நிலத்தது வலி. நீரது தண்மை, தீயது வெம்மை எனவரும். உடைமை என்பது உடைப்பொருளின் பாகுபாடு உணர நில்லாது பொதுமை உணர நிற்பது. அப்பொது கிழமையினும் வரும் என்றவாறு. சாத்தனது உடைமை எனவரும். சாத்தனது குழை என்றதனோடு இதனிடை வேற்றுமை என்னையெனின், சாத்தனதுடைமை குழை எனவும் வந்து, குறிப்பு வினைப்பொருளொடு முடிதலின் வேறோதப்பட்டது. வினைக்குறிப்பு ஓதுகின்ற வழி, அதுச் சொல் வேற்றுமை யுடைமை யானும்1 என்று ஓதினார் ஆகலின், ஈண்டுக் குழை என நிற்றலேயன்றிக் குழையை யுடையன் எனவும் வருதலின் ஈண்டு வேறுபடுத்து ஓதல்வேண்டுமென்று உணர்க. முறைமை என்பது உடையானும் உடைப்பொருளுமன்றி, முறைமையாகிய கிழமையான் வருவது. ஆவினது கன்று, மறியது தாய். கிழமை என்பது உரிமை. அஃதாவது இவற்கு இவள் உரியள் என்னும் பொருள்பட வருவது. முறைமையைச் சாரவைத்ததனால் கிழத்தியரென்று கொள்ளப்படும். அரசனது உரிமை. செயற்கையாவது, செயற்கையான் வருவது. சாத்தனது கல்வி, சாத்தனது கோலம். முதுமை என்பது பரிணாமம் குறித்து நிற்கும், சாத்தனது முதுமை. வந்தது கொண்டு வராதது முடித்தல்2 என்பதனால். இளமையுங் கொள்க. சாத்தனது இளமை. வினையென்பது தொழில் உணர வருவது. சாத்தனது வரவு.
1. வினையியல்--16 2. தன்னினமுடித்தல். (இரண்டாவதேடு.)
|