எயிர் புறம் உண்டாகலின் அகம் என ஒருபொருள் தோன்றி நின்றது. உள்-சிலையுட் பொருள். சிலைப்புறத்துப் பொருள் இன்மையின் உள் என ஒரு பொருள் தோன்றி நின்றது. உழை அரசனுழை இருந்தான். அரசன் அருகென ஒரு பொருள் தோன்றி நின்றது. கீழ்-மாடத்தின் கீழ் இருந்தான்: மேல் அன்மை காட்டிற்று. மேல்-மாடத்தின் மேலிருந்தான்: கீழ் அன்மை காட்டிற்று. பின்-அரசன் பின் இருந்தான்: முன் அன்மை காட்டிற்று. சார்-காட்டுச்சார் ஓடும் குறுமுயல்: காட்டைச் சார்ந்த இடம் என்பது தோன்றிற்று. அயல்-மனை அயல் இருந்தான்: மனை அல்லாத பிறஇடம் தோன்ற வந்தது. புடை என்பது பக்கம். எயிற் புடை நின்றான். எயிலின் கண் ஒருபக்கம் என்பது தோன்றிற்று: தேவகை என்பது திசைக்கூறு. அரங்கின் வடக்கிருந்தான், தெற்கிருந்தான் என்றவழி, வடக்கு தெற்கென ஒரு பொருள் தோன்றி நின்றது. முன்-அரசன் முன் இருந்தான்: பின் அன்மை காட்டிற்று. இடை, கடை, தலை என்பன கலத்தின் இடை நின்றான்; கலத்தின் கடை நின்றான்; கலத்தின் தலைநின்றான்: என மரக்கலத்தின் இட வேறுபாடு காட்டின. வலம், இடம் என்பன அரசன் வலத்திருந்தான் அமைச்சன், அரசன் இடத்திருந்தான் சேனாபதி என வலம் இடம் எனச் சில பொருள் தோன்றி நிற்றன. அன்ன பிறவும் என்றதனால், இல், வயின், வழி, மாட்டு, தேம், மருங்கு, பால், வாய், முதல் என வருவன வெல்லாம் கூறிய நெறியினால் வேறுபாடு உணர்த்துவனவும், உருபுமாத்திரமாகி நிற்பனவும், பெயராகி நிற்பனவும் அறிந்துகொள்க. (20) வேற்றுமைக்குப் புறநடை 81. | 1வேற்றுமைப் பொருளை விரிக்குங் காலை ஈற்றினின் றியலும் தொகைவயிற் பிரிந்து பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்ப. |
அறுவகை வேற்றுமைக்கும் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். வேற்றுமைக்கு உரிய பொருளை விரியக் கூறுங்கால், முதற்பெயர் இறுதிக்கண் இயலும் தொகைச் சொல்லின் கண், தொகையாம் தன்மையிற் பிரிந்து, பலநெறியாகப் பொருளைப் புணர்ந்து ஒலிக்கும் எல்லாச் சொல்லும் உரிய என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. தொகுத்தல் என்பது செறிதல், முதற் பெயரோடு செறிவது தொகை என்று பெயர் ஆயிற்று. அவையாவன:--படைக்கை, குழைக்காது, தாய்மூவர், குதிரைத்தேர், கருப்புவேலி, வரையருவி, பாண்டியநாடு, குன்றக்கூகை என்பன. இவற்றுள் இறுதிப் பெயர் முதற்பெயரோடு ஒட்டி நிற்றலின் தொகை என்றார். இவை விரிய நின்ற காலத்து. இவற்றைப் புணர்ந்து
1. இந்நூற்பாவில் முன் இரண்டடிகளை ஒரு நூற்பாவாகவும் பின்னிரண்டடிகளை ஒரு நூற்பாவாகவும் கொள்வர் இளம்பூரணர்.
|