இதுவுமது 84. | கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே. |
இதுவும் அது. இ - ள். கன்றலும் செலவும் ஆகிய வினைப் பொருண்மை மேற் சொல்லப்பட்ட இரண்டாவதனோடும். ஏழாவதனோடும் ஒன்றித் தோன்றும், எ-று. இரண்டும் ஏழும் என்பது மேலைச்சூத்திரத்தினின்றும் தந்துரைக்கப் பட்டது. எ - டு. சூதினைக் கன்றினான்; சூதின்கண் கன்றினான். நெறியைச் சென்றான்; நெறிக்கண் சென்றான். அவை பொருளுமாகி இடமுமாகி நிற்றலின் இரண்டற்கும் உரிய வாயின. (3) இரண்டாவதும் ஏழாவதும் ஒரு பொருட்கண் நிகழ்வுழி வரும் வேறுபாடு 85. | 1முதற்சினைக் கிளவிக் கதுவென் வேற்றுமை முதற்கண் வரினே சினைக்கை வருமே முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை சினைமுன் வருதல் தெள்ளி தென்ப. |
இதுவும் இரண்டாவதும் ஏழாவதும் ஒரு பொருட்கண் நிகழ்வ தோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். முதலும் சினையும் சேரவருஞ் சொற்கு, முதற்கண் அது வரின் சினைக்கு ஐ வரும், முதற் கண் ஐ வரின் சினைக் கண் கண் வருதல் தெளியப்பட்டது என்று சொல்லுவர் புலவர், எ - று. மயக்கம் அன்று என்றவாறாம். எ - டு. யானையது கோட்டைக் குறைத்தான்; யானையைக் கோட்டின்கண் குறைத்தான் என வரும். ‘கண் என் வேற்றுமை சினை முன்வருதல் தெள்ளிது’ எனவே தெள்ளிதன்றிச் சிறுபான்மை ஐ வருதலும் கொள்ளப்படும். எ - டு. யானையைக் கோட்டைக் குறைத்தான். (4) முதலும் சினையும் சொல்லுவான் குறிப்பினவாதல் 86. | முதலுஞ் சினையும் பொருள்வேறு படாஅ நுவலுங் காலைச் சொற்குறிப் பினவே. |
1. இந்நூற்பாவில் முன்னிரண்டடிகளை ஒரு நூற்பாவாகவும், பின்னிரண்டடிகளை வேறொரு நூற்பாவாகவும் கொள்வர் பிறவுரையாசிரியர்கள்.
|