60தொல்காப்பியம்[வேற்றுமை மயங்கியல்]

60

‘அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை’

(திருக்குறள்-புறங்கூறாமை, 9).

என்றவழி அறத்தை நோக்கியென விரித்தலேயன்றி, அறத்தான் நோக்கி யாற்றுங்கொல், அறத்தின் நோக்கி யாற்றுங் கொல் என விரிப்பினும் ஆம் என்றவாறு. புன்சொல் உரைப்பானை நிலம் பொறுக்கின் பொறையாகிய தருமத்தைக் குறித்தோ, அத்தருமம் தனக்கியல்பாதலின் அஃதேதுவாகவோ என இருவாற்றானும் விரிப்பினும் அமைந்தவாறு கண்டுகொள்க.

(9)

தடுமாறு தொழிலில் இரண்டாவதும் மூன்றாவதும் மயங்கல்

91.

1தடுமாறு தொழிற்பெயர்க் கிரண்டும் மூன்றுங்
கடிநிலை இலவே பொருள்வயி னான.

இரண்டாவதும் மூன்றாவதும் மயங்குமாறு உணர்த்துதல்
நுதலிற்று.

இ - ள். இரண்டு பொருட்கண் தடுமாறி வரும் தொழிலையுடைய பெயர்க்கு இரண்டாவதும், மூன்றாவதும் வருதல் நீக்கப் படா: பொருள் கொள்ளுமிடத்து, எ-று.

அஃதாவது ‘புலிகொல் யானை’ என்பது. இதற்குப் பொருள் உரைக்குங்கால், புலியைக் கொன்ற யானை எனவும். புலியாற் கொல்லப்பட்ட யானை எனவும் இவ்வாறு இருவகை வேற்றுமைக்கும் உரித்தாகலின் மயக்கம் ஆயிற்று. பொருள் துணியுமாறு வருகின்ற சூத்திரத்தாற் கூறுப.

(10)

மேலதற்கோர் புறநடை

92.

ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின்
வேற்றுமை தெரிப உணரு மோரே.

மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று.

- ள். இறுதிக்கண் நின்ற பெயர்முன்னர்ப் பொருள் அறியவரும் உரையினால், வேறுபாடறிப, அதன் இயல்பு உணர வேண்டுவார், எ - று.

- டு. புலி கொல் யானை ஓடுகின்றது; புலி கொல் யானைக் கோடு வந்தது என்றவழி, கொலையுண்ட பொருள் விளங்கியவாறு கண்டு கொள்க.

(11)

ஓம்படைப் பொருளில் இரண்டாவதும் மூன்றாவதும் மயங்கல்

93.

ஓம்படைக் கிளவிக் கையு மானுந்
தாம்பிரி விலவே தொகைவரு காலை.


1. இங்கே, ஏனை உரையாசிரியர்கள், அதுவென் வேற்றுமை என்ற சூத்திரத்தை வைத்து உரை செய்துள்ளார்கள்.