[வேற்றுமை மயங்கியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்63

63

சான்றோர் செய்யுளினும் வரூஉம் வேற்றுமை மயக்கம் எல்லாம் இதுவே ஓத்தாகப் பொருள் உரைத்துக் கொள்க என்றவாறாயிற்று.

எ - டு. ‘நோயின் நீங்கினான்’ என்பது ‘நோயை நீங்கினான்’ எனவும், ‘சாத்தனை வெகுண்டான்’ என்பது ‘சாத்தனொடு வெகுண்டான்’ எனவும் ஆம்.

இத்துணையும் ஒரு வேற்றுமைக்குரிய பொருளே ஏனை வேற்றுமைக் கண்ணும் மயங்குமாறு கூறப்பட்டது.

(17)

உருபு தொடர்ந்து அடுக்கிய வழிப்படுவதோர் இலக்கணம்

99.

உருபுதொடர்ந் தடுக்கிய வேற்றுமைக் கிளவி
ஒருசொன்னடைய பொருள்சென் மருங்கே.

ஓர் உருபு பல தொடர்ந்தடுக்கியவழி வரும் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

ஒரு சொல் பல அடுக்கி வரும் வழி--பெயரடுக்கு, வேற்றுமையடுக்கு, முற்றுச்சொல் லடுக்கு, பெயரெச்ச அடுக்கு, வினையெச்ச அடுக்கு, இடைச்சொல்லடுக்கு, உரிச்சொல்லடுக்கு எனப் பலவகைப்படும். அவற்றுள், வேற்றுமை யடுக்காவது-ஓருருபு அடுக்கி வருதலும், பல உருபு அடுக்கி வருதலும் என இருவகைப்படும். அவற்றுள் ஓருருபு அடுக்கி வருதல்--ஒரு பொருண்மேல் அடுக்கி வருதலும், பல பொருண்மேல் அடுக்கி வருதலும் என இருவகைப்படும். அவ்விருவகையும் இச்சூத்திரத்தாற் கூறப்படும்.

இ - ள். உருபு தொடர்ந் தடுக்கிய வேற்றுமைச் சொல் ஒரு சொல் நடையவாம், முடிக்கும் பொருண்மை செல்வுழி எ-று.

ஓர் உருபு ஒரு வினையான் முடியாது, பல உருபு ஒரு வினையான் முடியும் என்றதனான் வழுவமைதி கூறியவாறாம்.

“தேம்பைந்தார் மாறனைத் தென்னர் பெருமானை
வேந்தனை வேந்தர்மண் கொண்டானை--யாஞ்சிறிதும்
எங்கோல் வளைகவர்ந்தான் என்னலும் ஆகுமோ!
செங்கோல் சிறுமை யுற.”

இதனுள் ஐகார உருபு பல அடுக்கி, ஒரு பொருட்கண் வந்து, வளைகவர்ந்தான் என்னலும் ஆகுமோ என்பதனோடு முடிந்தவாறு கண்டுகொள்க..

“கொல்லிப் பொருப்பனாற் கொங்கர் பெருமானால்
வில்லிற் பகைகடிந்த வேந்தனால்--அல்லியந்தார்க்
கோதையால் வையங் குளிர்தூங்க என்கொலோ!
பேதையார் எய்துவது பேது.”