64தொல்காப்பியம்[வேற்றுமை மயங்கியல்]

64

இது மூன்றாவது அடுக்கி வந்து குளிர் தூங்க என்பதனோடு முடிந்தது.

“வாராய்நீ புறமாறி வருந்திய மேனியாட்கு
ஆரிருட் டுணையாகி யசைவளி யலைக்குமே

கமழ்தண்டா துதிர்ந்துக வூழுற்ற கோடல்வீ
யிதழ்சோருங் குலைபோல விறைநீவு வளையாட்கு”

கலி. நெய். 4.

இது நான்காவது அடுக்கிவந்து அலைக்கும் என்பதனோடு முடிந்தது.

“வீரப் புலியனின் வெல்போர் வளவனிற்
கோரப் பரியுறந்தைக் கோமானின்--ஆரலங்கல்
மற்படுதோட் செம்பியனின் மல்லன் மணிநேரி
வெற்பனிற் றீர்ந்துளவோ வேந்து”.

இதனுள் ஐந்தாவது பலவடுக்கிவந்து தீர்ந்து என்பதனோடு முடிந்தது.

“பெற்றி திரிந்து பெருவறங் கூறினும்
மற்றுயிர்கள் நோயால் வருந்தினுங்--கொற்றக்
குடையான்கண் நீதிபுரி கோலான்கண் ஆழிப்
படையான்கண் நிற்கும் பழி.”

இதனுள் ஏழாவது பலவடுக்கிவந்து நிற்கும் என்பதனோடு முடிந்தது. இவை ஒரு பொருண்மேல் ஓருருபு அடுக்கி வந்தன.

உழவை, வாணிகத்தைச் செய்யும் எனவும்: சோற்றால், தண்ணீரால் வயிறு நிறைக்கும் எனவும்; அந்தணர்க்குச் சான்றோர்க்குக் கொடுக்கும் எனவும்; நிலத்தினும், வானினும் பெரிது எனவும்; நல்லாற்றது. தீயாற்றது என்னாது கொள்ளும் எனவும்; அரங்கிலே, அறையிலே நடிக்கும் எனவும் இவ்வாறு வருவன பல பெயர்க்கண் ஓருருபு வந்து ஒரு சொல்லான் முற்றுப்பெற்றன.

“துணிநீராற் றூய்மதி நாளா லணிபெற
ஈன்றவ டிதலைபோ லீர்பெய்யுந் தளிரொடும்
ஆன்றவ ரடக்கம்போல் அலர்செல்லாச் சினையொடும்
வல்லவர் யாழ்போல வண்டார்க்கும் புதலொடும்
நல்லவர் நுடக்கம்போல் நயம்வந்த கொம்பொடும்
உணர்ந்தவர் ஈகைபோல் இணரூழ்த்த மரத்தொடும்
புணர்ந்தவர் முயக்கம்போற் புரிவுற்ற கொடியொடும்
நயந்தார்க்கோர் நல்லைமன் இளவேனில்.”

(கலி. பாலை. 32)