நான்காவது ஒழிந்த உருபுகள் ஏனை உருபிற்கு உரிய பொருளொடு மயங்கும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். நான்காவது ஒழிந்த உருபுகளும் ஏனைப் பொருளோடு மயங்கும் மரபினை யுடைய; அவை சொல்லிலக்கணத்தாற் குற்றமில. எ - று. எ - டு. “கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினிர் என்று”. | (குறள். 1313) |
இதனுள் ஒருத்திக்கு எனற்பாலது ஒருத்தியை யென இரண்டாவதனோடும் மயங்கி வந்தது.1“அறல்சா அய் பொழுதோடெம் அணிநுதல் வேறாகி” என்றவழிப் பொழுதின்கண் எனற்பாலது பொழுதோடென முன்றாவதனோடு மயங்கிற்று. பிறவும் அன்ன. (27) எழுவகைவேற்றுமையும் தொழில் முதனிலை எனல் 109. | வினையே செய்வது செயப்படு பொருளே நிலனே காலங் கருவி யென்றா இன்னதற் கிதுபயன் ஆக வென்னும் அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ ஆயெட் டென்ப தொழின்முதல் நிலையே. |
எழுவகை வேற்றுமையினும் காரக வேற்றுமை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ - ள்.வினையும், கருத்தாவும், செயப்படுபொருளும், இடமும், காலமும், கருவியும் என்று சொல்லப்பட்டவற்றோடு கொள்வதூஉம். பயனும் ஆகிய அவ்விரண்டொடும் தொகைஇ, அவ் வெட்டென்று சொல்லுவர் தொழிற் காரகம், எ - று. நெய்தான் என்றவழி, நெய்யப்பட்ட பொருளும், நெய்தலாகிய தொழிலும், நெய்தற்குக் கருவியும், நெய்தற்குக் காலமும், நெய்தற்கு இடமும், நெய்யுங் கருத்தாவும், அதனைக் கொள்வானும், அதனாற் பயனும் உள்ளவழி யல்லது நெய்தற் றொழிலாற் செய்யப்பட்ட பொருள் உளதாகாமையின், அவற்றை முதனிலை யென்றார். அவற்றுள், பயனும் கொள்வதும் ஏனையவற்றோடு ஒத்த சிறப்பின்மையின், இரண்டென, வகுத்துக் கூறினார், இவற்றுள், தொழிலும், செயப்படு பொருளும் இரண்டாவதாயின: ஆடையை நெய்தான், நெய்தலைச் செய்தான், கருவியும், கருத்தாவும் மூன்றாவதாயின: சாலியனால் நெய்யப்பட்டது, நெம்பினால் நெய்யப்பட்டது, கொள்வதும் பயனும் நான்காவது ஆயின: அந்தணர்க்கு நெய்தான், கூலிக்கு நெய்தான். இடமும் காலமும் ஏழாவது ஆயின: கூடத்துக்கண் நெய்தான். காலைக்கண் நெய்தான், இவற்றுள் கருத்தா முதல் வேற்றுமையும் ஆம். சாலியன் நெய்தான்.
1. கலி. பாலை. 26.
|