அவை அப்பொருட்கண் வந்தவாறு-முதலிற் கூறும் சினையறி கிளவியும். சினையிற் கூறும் முதலறி கிளவியும். பண்புகொள் பெயரும், இருபெயர் ஒட்டும் ஆறாம்வேற்றுமைப் பொருண் மயக்கம். பிறந்தவழிக் கூறல் ஏழாம் வேற்றுமைப் பொருண் மயக்கம். இயன்றது மொழிதலும் வினைமுதல் உரைக்கும் கிளவியும் மூன்றாம் வேற்றுமைப் பொருண்மயக்கம். (31) இதுவுமது 113. | அளவும் நிறையும் அவற்றொடு கொள்வழி உளவென மொழிப உணர்ந்திசி னோரே. |
இதுவும் ஆகுபெயராமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். அளவுப்பெயரும் நிறைப்பெயரும் மேற்சொல்லப்பட்ட ஆகுபெயரோடு கொள்ளுமிடமும் உளவென்று சொல்லுவர் உணர்ந்தோர். எ - று. கொள்வழி உள என்றதனால், தம்பெயர் விளங்கும் எண்ணுக் குறிப்பன்றி அளக்கப்பட்ட பொருள் மேலும், நிறுக்கப்பட்ட பொருள் மேலும், கருவி மேலும் வரின் அவையும் வேற்றுமைப் பொருளான் ஆகு பெயராம் என்று கொள்க. எண்ணுமுறையான் உழக்கு, நாழி என்னும் அளவினைக் கொள்ளும் பாண்டத்தினையும், அளக்கப்படும் பொருளினையும் உழக்கு, நாழி என்ப. கால் கழஞ்சு என்னும் நிறையினது அளவாகிய கல்லையும், பொன்னையும் கால், கழஞ்சு என்ப. இந் நிலம், ஒருமா. இம்மனை முக்கால் என்பனவும் அளவுப் பகுதிய. அஃதேல், இவ்வெருது ஒன்று என எண்ணப்பட்ட பொருள்மேல் எண்ணுப் பெயர் வருவது ஆகுபெயர் ஆகாதோ எனின், அளவும் நிறையும் போலாது எண்ணப்பட்ட பொருளை எண்ணுப் பிரிந்து நில்லாமையான், அதுவும் அப்பொருட்கு ஒரு காரணத்தாற் பெற்ற பெயர் எனின் அல்லது ஆகுபெயர் எனப்படாதென்று கொள்க. அளவும். நிறையும் பிரிந்து நின்றவாறு என்னை யெனின், இப்பொன் கால், இப்பொன் கழஞ்சு என்றவழி. அவை ஓர் உருவாகியும், பல உருவாகியும் வரின் அல்லது. கால் கழஞ்சு என்னும் நிறைப்பொருண்மை புலப்படாது நிற்றலிற் பிரிந்து நின்றன. (32) ஆகுபெயர்க்குப் புறநடை 114. | கிளந்த வல்ல வேறுபிற தோன்றினும் கிளந்தவற் றியலான் உணர்ந்தனர் கொளலே. |
ஆகுபெயர்க்குப் புறநடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள். எடுத்து ஓதப்பட்ட வாய்பாட்டான் அன்றி வேறு வருவனவும் எடுத்தோதிய நெறியினான் ஆகுபெயர் ஆமாறு அறிந்துகொள்க. எ-று.
|