அணிந்துரை
 

முனைவர் ச. அகத்தியலிங்கம்,
எம். ஏ., பிஎச்.டி., கேரளா. பிஎச்.டி., (இந்தியானா அமெரிக்கா)
துணைவேந்தர்

தமிழ்ப் பல்கலைக்கழகம் - தஞ்சாவூர்.
 

பேராசிரியர் ச. பாலசுந்தரம்  அவர்கள் எழுதியுள்ள  தொல்காப்பியம் -
சொல்லதிகாரம் - ஆராய்ச்சிக்காண்டிகையுரை நூலைப் படித்து மகிழ்ந்தேன்.
 

தஞ்சைத்தரணியில்  பல  ஆண்டுகள்  புலவர்  வகுப்பு  மாணவர்க்குப்
பாடம்  சொல்லிக்   கொடுத்தவர்   பாவலர்   ச. பாலசுந்தரம்  அவர்கள்.
இப்போது  தமிழ்ப்பல்கலைக்  கழகச் சங்க  இலக்கிய அகராதித்திட்டத்தில்
பணிபுரிபவர். தமிழ்  இலக்கண  இலக்கியங்களைக் கற்றுத்துறை போகியவர்.
யான்  பெற்ற பேறு பெறுக இவ் வையகம்  என எண்ணும் சிந்தனையாளர்.
தான்  கற்றதைக்  கேட்டதை அனுபவத்தில் பிறரும் அறியவேண்டும் என்ற
அவாவினால் தொல்காப்பியம் என்னும் பேரிலக்கண நூலுக்குப் புதிய உரை
எழுதி  வளம் சேர்த்துள்ளார்.  தொல்காப்பியச்  சொல்லதிகாரம்  என்றும்
என்  நெஞ்சைக்கவரும்  இலக்கணமாகும்.  இதனைப்  படித்துப்  படித்துச்
சிலநேரங்களில் புது  உரைகள் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். இத்தகைய ஒரு
சிறந்த  இலக்கணத்தை  உருவாக்கிய   தமிழ்ப்   பாரம்பரியத்தை   நான்
நினைத்துப்  போற்றியிருக்கிறேன். இந்நிலையில் பாவலர் எழுதியுள்ள புதிய
உரையைப்  படிப்பதற்குரிய  வாய்ப்பு  எனக்குக்  கிடைத்தது. அவருடைய
அறிவிலும்  ஆராய்ச்சியிலும்   கண்ட  பல   நுணுக்கமான   செய்திகளை
இந்நூலுள்  தந்துள்ளார்.  இப்பெரும் இலக்கணத்தைச்  சில கோணங்களில்
பார்ப்பதற்கு   இவருடைய   உரை   பயன்படும்   என   எண்ணுகிறேன்.
உரையாசிரியர்கள்  கருத்துக்களோடு  தன்னுடைய   எண்ணத்தையும்  பல
இடங்களில் இவர் தந்து செல்கிறார். இந்நிலையில் இந்நூல் அறிஞர்களுகும்
ஆராய்ச்சியாளர்களுக்கும்  பல்கலை  மாணவர்களுக்கும்  பயன்படும்  என
எண்ணுகிறேன். இத்தகைய நல்ல முயற்சிக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
 

தஞ்சாவூர்
31-8-88

ச. அகத்தியலிங்கம்.