காலம் என்றது காலக் கடவுளை (இயமன், கூற்றுவன், காலன்) உலகம் என்றது நிலத்தெய்வத்தை (புவிமகள், நிலமகள், மண்மகள்) உயிர் என்றது உயிர்க்கிழவனை (சீவன், ஆன்மா, மன்உயிர்) உடம்பு என்றது தெய்வப்படிமத்தை (மூர்த்தி, கல்நின்றவீரர், அருச்சனைமூர்த்தி) பால்வரை தெய்வம் என்றது கந்தழியை (இலிங்கம், நடுதறி) அஃது "அவன் அவள் அது" எனப்பாற் பொதுமையாக நிற்றலின் கந்தழி பால்வரை தெய்வம் எனப்பட்டது. வினை என்றது நல்லூழும் அல்லூழுமாகிய ஊழினை (விதி-ஊழ்) பூதம் என்றதுதெய்வப்படையினை (பூத கணங்கள்) ஞாயிறு-கதிரவன்; திங்கள்-நிலாமண்டிலம்; சொல்-நாமகளாகிய தெய்வம். |
அன்னபிற என்றதனான் கனலி, காற்று, நீர், ஆகாயம் முதலிய பூதங்களும் செவ்வாய், புதன் முதலிய கோள்களும், அருந்ததி முதலாய விண்மீன்களும் அணங்கு முதலாய தெய்வக் கூறுகளும் கொள்க. இவை அஃறிணையான் முடியுமாறு : |
இவரைக் காலம் கவர்ந்தது-நிலத்தெய்வம் வியந்தது-உயிர் வீடுற்றது. உடம்பு ஒளி பூத்தது-நடுதறி அருளிற்று-நல்வினை வாய்த்தது-பூதம் புடைத்தது-ஞாயிறு எழுந்தது-திங்கள் நிலவிற்று-சொல் விளங்கிற்று-கனலி ஓங்கிற்று - அணங்கு அணங்கிற்று எனவரும். |
இச்சூத்திரம், "தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும் இவ்வென அறியும் அந்தந் தமக்கில உயர்திணை மருங்கிற்பால்பிரிந் திசைக்கும்" என்றமையான் இத்தெய்வஞ் சுட்டிய பெயர்கள் உயர்திணை முடிபு கொள்ளும் கொல்? எனவரும் ஐயத்தை நீக்கி அவை பால்காட்டும் ஈற்றிடைச் சொல் பெற்றாலன்றி உயர்திணை மருங்கின் இசையா எனக்கூறிற்று என்க. |
இவை தத்துவப் பொருளாய் உருவகம் பெறாத தெய்வப் பெயர்களே எனினும், சொல்லான் அஃறிணையே ஆதலின் உயர்திணை மருங்கின்பால் பிரிந்திசையா என்க. |
இவ்விரு நூற்பாக்களும் "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே" "தெய்வஞ் சுட்டிய பெயர்நிலைக் கிளவி" என்பவற்றிற்குப் புறனடையாய்ப் பாலறிகிளவி மயங்கல் கூடா எனத் தொடர்மொழி யாக்கத்திற்குரிய மரபு கூற எழுந்தன என்பதை ஊன்றிநோக்காமல் உரையாசிரியன்மார் தத்தமக்குத் தோன்றியவாறு கூறிச்சென்றனர். |