கிளவியாக்கம்83

உரையாளர் 'இவற்குக் குடிமை   நன்று'   எனக்   காட்டிக்   குடிமை
அஃறிணை முடிபு கொண்டது என்ப. ஆண்டு   எழுவாயும்  அஃறிணையே
யாதலறிக. 'பாவை, யானை' என்பவை  ஒப்புமை  கருதாது  காதல்   பற்றி
வந்தன என்ப. உவமை நிலைக்களனாக ஆசிரியர் 'சிறப்பே நலனே  காதல்
வலியொடு அந்நாற் பண்பும்   நிலைக்களன்   என்ப'   (உவம-4)   எனக்
கூறியிருத்தலின் ஒப்புமை கருதாது எவ்வாறு வரும்?   உயிரும்   உடம்பும்
மக்களுடையவை எனச்  சேனாவரையர்  வலிந்துவிளக்கம்  கூறுவார்,  கூறி
உயிர்நீத்து ஒருமகன் கிடந்தான்,  அறஞ்செய்து  சுவர்க்கம்  புக்கான்  என
எடுத்துக் காட்டுவார். இவை உயர்திணைச் சொல்லாய்  உயர்திணை  முடிபு
கொண்டனவேயாம்.  இங்ஙனம்   கூறியவர்   உயர்திணைப்   பொருளாய்
அஃறிணை முடிபு   கொண்டனவற்றைக்  காட்டவேண்டாவோ?  இவ்வாறே
ஏனைஉரையாளர் கருத்துக்களையும் ஆய்ந்துநோக்கி உண்மை உணர்க.
 

சூ. 58 :

நின்றாங் கிசைத்தல் இவண்இயல் பின்றே 
[58]
 

க-து : 

மேற்கூறிய சொற்கள் பற்றிய மரபினை வலியுறுத்துகின்றது.
 

உரை : அஃறிணை மருங்கிற் கிளந்தாங்கியலும் எனப்பட்ட சொற்களும்
பால் பிரிந்திசையா உயர்திணை மேன எனப்பட்ட கிளவிகளும்  கூறப்பட்ட
இவ்வடிவான் நிற்குமிடத்து   உயர்திணையாக  இசைத்தல்  இலக்கணமாதல்
இல்லை. அஃறிணையாயே இசைக்கும்.
 

வரும் நூற்பாவின்கண் வேறிடத்தான  என்பதனான்   ஈண்டு   இவண்
என்றது இடத்தை உணர்த்திநின்றது. இடமாவது குடிமை  முதலிய  பண்புப்
பொருளையும் காலம் முதலிய தெய்வப் பொருளையும் இடமாகக்  கொண்டு
நிற்கும்   நிலையாகும்.   நின்றாங்கிசைத்தல்   இயல்பின்று   என்றதனான்
நிலைவேறுபடின் இசைக்கும் என்பது கருத்தாகலின், கூறியது  கூறலாகாமை
உணர்க. எடுத்துக்காட்டு மேற்காட்டப்பெற்றன.
 

சூ. 59 :

இசைத்தலும் உரிய வேறிடத் தான  
[59]
 

க-து :

மேற்கூறிய   சொற்களுக்கும்   கிளவிகளுக்கும்   ஆவதொருமரபு
கூறுகின்றது.
 

உரை : மேற்கூறிய சொற்களும் கிளவிகளும்   வேறு   நிலைமைக்கண்
உயர்திணையாய் இசைத்தற்கும் உரியவாம்.