கிளவியாக்கம்85

கருத்தினனாயின்      அவை    இனஞ்செப்பினவாகாவோ?      எனின்,
அக்கருத்தினனாயின் ஆக்களே வாழ்க, அந்தணரே வாழ்க  என   விதந்து
கூறுதலன்றி இங்ஙனம் கூறுதல்   மரபன்று   என்க.   அவ்வழி   ஏகாரம்
பிறவற்றைப் பிரித்தல் காண்க.
 

இனி, ஒன்றென முடித்தல்   என்னும்    உத்தியான்    சோறுண்டான்
என்றவழிக் கறியும், துவையும், நீரும் உடன் உணப்பட்டமை  உணர்த்தலும்,
பறைமுழங்கிற்று என்றவழிக் கொம்பு முதலியவை உடன் இசைக்கப்பட்டமை
உணர்த்தலும்,  நஞ்சுண்டாம்  சாம்   என்றவழி   ஏனைப்பாலும்   உடன்
உணர்த்தலும், பரதவர் சென்ற படகு  கவிழ்ந்தது   என்புழிப்   பரதவரும்
கவிழ்ந்தார் என உணர்த்தலும், குடத்தைச் சுமந்து சென்றவன்   வீழ்ந்தான்
என்புழிக் குடமும் வீழ்ந்தது என உணர்த்தலும் இவை  போல்வன  பிறவும்
இனஞ் செப்புதலாகக் கொள்க.
 

சூ. 61 :

கண்ணும் தோளும் முலையும் பிறவும்

பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி 

பன்மை கூறும் கடப்பா டிலவே 

தம்வினைக் கியலும் எழுத்தலங் கடையே 

[61]
 
க-து :

பன்மையாகவே     உள்ள    சினைக்    கிளவிகள்   பயனிலை
கொண்டு முடியும் மரபாமாறு கூறுகின்றது.

 

உரை : கண்முதலாயினவும்    அவைபோல்வன    பிறவுமாக    இரு
திணையிடத்தும்    பன்மைப்    பொருளாயே   வரும்   உறுப்புப்பற்றிய
பெயர்ச்சொற்கள், தமக்கொத்த பன்மை வினையொடு முடிதற்குரிய எழுத்துப்
பெறுதல் அல்லாத இடத்துப் பன்மை வினையொடு கூறும் யாப்புறவு
உடையன அல்ல.
 

என்றது: அவை'கள்' என்னும்   இறுதிநிலை    பெறாதவழி    ஒருமை
வினையான் கூறுதல் வழாநிலையே என்றவாறாம்.   பன்மை   கூறலாவது :
பன்மை வினைமுடிபாகக் கூறுதல்.   தம்வினைக்குரிய   எழுத்தாவது : கள்
என்னும் ஈற்றிடைச் சொல். கண் முதலாயவை   பன்மையாகவே தோன்றும்
பொருளாகலின் அவை ஒருமைக்கும்   பன்மைக்கும்   உரிய   அஃறிணை
இயற்பெயராகாமையின் அவை பற்றிய மரபினை விதந்து கூறினார் என்க.
 

எ-டு :கண் நன்று, தோள்  நன்று, கண்   பெரிது;   தோள்   வலிது
எனவரும். தம் வினைக்குரிய எழுத்தாகிய கள்  என்பதனொடு   கூடிவரின்
கண்கள் நொந்தன-முலைகள் எழுந்தன-தோள்கள் வலியன எனவரும்.