வேற்றுமை எய்தும் என்பதனை வேற்றுமைமயங்கியல் 29-ஆம் நூற்பா வானும், வேற்றுமை இலக்கணத்தைத் தொடர்மொழிக்கண் காணல் வேண்டு மென்பதனை 22-ஆம் நூற்பாவானும் அறிக. | இனி எழுவாய் வேற்றுமையாகிய பெயர் செயப்படுபொருள் முதலாக வேறுபடும் நிலையும், அவற்றின் பொருள் வகையும் அவற்றின் பெயரும் பிறவும் பற்றி வரையறை கூறும் பகுதியை வேற்றுமையியல் என்றும், அப்பொருள்களும் உருபுகளும் கூறிய முறையினின்று மாறித் தம்மரபினவாய் மயங்கிவரும் நிலையையும் வேற்றுமை பற்றிய பிற மரபுகளையும் கூறும் பகுதியை வேற்றுமைமயங்கியலென்றும், எல்லாப் பெயர்களும் விளிகொள்ளாமை பற்றியும், கொள்ளும் பெயர் இவை என்பது பற்றியும் தனக்கென உருபுநிலை இல்லையேனும் ஈறுதிரிதல் முதலான வேறுபாடுறுதல் பற்றியும் எட்டாம் வேற்றுமையது மரபு கூறும் பகுதியை விளிமரபு என்றும் பெயரிட்டு மூன்றியலாக வகுத்துக் கூறுகின்றார். | இனி, உரையாசிரியன்மார் கிளவியாக்கத்தையடுத்து வேற்றுமையியலை வைத்ததற்குக் காரணம், இதுவும் பெயரிலக்கணமாதல் பற்றிப் பெயரியலொடு வைக்கப்பட்டதென்றும், பெயரும் இடைச்சொல்லுமாக வருதலின் பொதுவிலக்கணமாதல் கருதிக் கிளவியாக்கத்தின் பின் வைக்கப்பட்டதென்றும் கூறுவர். மேலும் பெயரிலக்கணமாகிய உருபேற்றலும் காலங்காட்டாமையும் இயைபுபட்டமையான் ஈண்டு ஓதப்பட்டன எனச் சேனாவரையர் கூறுவார். அவ்வுரைகள் நூலாசிரியர் கருத்திற்கும் சூத்திர அமைப்பிற்கும் ஒவ்வா என்பது பின்வரும் சூத்திர உரைவிளக்கங்களான் தெளிவாகும். | இனி, இலக்கண ஆசிரியன்மாரும், உரையாசிரின்மாரும் வேற்றுமை என்னும் சொற்பொருள் பற்றி மயங்கவைத்துள்ளமையான் வேற்றுமை என்பது உருபா, உருபேற்ற பெயரா, உருபு நோக்கிவரும் சொல்லா, வேற்றுமைப் படும் பொருளா, வேறுபாட்டினைச் சுட்டும் தன்மையா? எது என்பது பின்வரும் விளக்கத்தாற் புலனாகும். | 'மரம் வளர்ந்தது' என்பது எழுவாய் வேற்றுமைத் தொடராகும். 'சாத்தன் மரத்தை வெட்டினான்' என்பது இரண்டாம் வேற்றுமைத் தொடராகும். இதன்கண் ஐ என்பது உருபு. மரத்தை என்பது உருப்பேற்ற பெயர். வெட்டினான் என்னும் கருத்தா வேற்றுமையைச் செய்த பொருள். வேறுபாட்டினை எய்தியது மரம், வேறுபாடு வெட்டப்பட்ட நிலை. ஈண்டு மரம், |
|
|