வேற்றுமையியல்89

வெட்டப்பட்ட செயற்பாடு கொண்டநிலையைக்   கருதியே   அதனைச்
செயப்படுபொருள் என்கின்றோம்.   எனவே   பெயர்ப்பொருள்   எய்தும்
வேறுபாட்டினையே தொல்லாசிரியன்மார்  வேற்றுமையாகக்   கொண்டமை
புலனாகும்.
 

இதனை எழுவாய் வேற்றுமை பெயர் தோன்றும் நிலை,   இரண்டாவது
வினையே   வினைக்குறிப்பு    அவ்விருமுதலிற்றோன்றும்,    மூன்றாவது
வினைமுதல்கருவி   அனைமுதற்று,    நான்காவது    எப்பொருளாயினும்
கொள்ளும், ஐந்தாவது இதனின் இற்று இது.   ஆறாவது   இதனது   இது,
ஏழாவது வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின் அனைவகைக் குறிப்பு,
எட்டாவது விளி   என   ஆசிரியர்   அதன்   வேறுபடு   நிலையையே
வேற்றுமையாகக் கூறுமாற்றான் தெளியலாம். 
 

இனி, இவ்வேற்றுமை பற்றிய இலக்கணங்களைக் கூறுமிடத்து  ஆசிரியர்
வேற்றுமைப் பட்டதனைக் காணற்குத் துணையாக  நிற்கும்  உருபுகளையும்,
உருபேற்ற     சொற்களையும்       வேறுபாட்டினைப்     புலப்படுத்தும்
பொருள்களையும் ஒற்றுமைநயத்தான் வேற்றுமை   எனக்கூறுவார்.   அவர்
ஆட்சினோக்கி மயங்காமல் பெயர்ப்பொருள் வேற்றுமை எய்தும்  நிலையே
வேற்றுமையாம் என்பதனைக் கடைபிடித்தல் வேண்டும் என்க.
 

சூ. 62 :

வேற்றுமை தாமே ஏழென மொழிப 

[1]
 
க-து :

சிறப்புடைய வேற்றுமை இத்துணை என்கின்றது. 

 

உரை :பெயர்ப்பொருள் எய்தும்   வேற்றுமை   ஏழென்று   கூறுவர்
ஆசிரியர். அவையாவன ; பெயர்எழுவாயாகி அஃது இடம் ஈறாக  எய்தும்
வேறுபாடுகளாம். தாம் ஏ என்னும் இடைச்சொற்கள்,    அடிநிரப்ப   வந்த
அசையாம்.
 

சூ. 63 :

விளிகொள் வதன்கண் விளியொடு எட்டே  

[2]
 
க-து :

சிறப்பில்லாத   வேற்றுமை   இதுவென்றும்   அதனொடு    கூடி
வேற்றுமையின் தொகை எட்டாம் என்றும் வலியுறுத்துகின்றது. 

 

உரை :விளிகொள்வதாகிய     பெயர்க்கண்     தோன்றும்    விளி
வேற்றுமையொடு (அவ் ஏழும் கூட) வேற்றுமை எட்டாகும்.