ஈற்ற என்றது 'வகைய' என்றவாறு. உருவென மொழியினும் அஃறிணைப் பிரிப்பனும் இருஈற்றும் உரித்தே சுட்டுங் காலை [கிளவி - 24] என்பதனான் 'ஈறு' வகையென்னும் பொருட்டாதலை அறிக, |
எனவே இப்பெயரானே இவ்எட்டு வேற்றுமைகளும் சுட்டி வழங்கப்பெறும். இதனை, அன்றியனைத்தும் பெயர்ப்பயனிலையே, (வே - 5) ஐயெனப் பெயரிய, ஒடுவெனப் பெயரிய -என ஆசிரியர் ஆளுமாற்றான் அறிக. ஈண்டு நிறுத்த முறையானே பின்னர் எண்ணுப் பெயரான் இவற்றை வழங்குதற்பொருட்டு இங்ஙனம் நிரல் செய்யப்பெற்றன. இவற்றுள் தமக்கென உருபுகளில்லாத முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையும் பொருளானும், ஏனைய வேற்றுமைகள் உருபானும் பெயர் பெற்றன. |
இனி, முதல் வேற்றுமைக்கு ஆனவன், ஆகின்றவன் என்றாற் போல்வன சொல்லுருபென்று கருதுவர் ஒரு சாரார், அவர் வடமொழியைக் கருத்திற்கொண்டு அவ்வாறு கூறினவர் ஆவார். ஆனவன், ஆகின்றவன் என்றாற் போல்வன 'ஆதல்' என்னும் ஆக்கச் சொல்லடியாகப் பிறந்தவையாகும். ஆக்கந் தானே காரண முதற்றாகலின், இயற்கைப் பொருளைச் செயற்கைப் பொருளாகக் கூறுதல் தமிழ் மரபு அன்றென்க. |
பால்காட்டும் இறுதி இடைச்சொற்களை முதல்வேற்றுமை உருபாகக் கூறுதலும் முதனிலைப் பெயர்கள் 'சு' என்னும் உருபு புணர்ந்து கெட்டதாகக் கூறுதலும் வடமொழி இலக்கணக் கோட்பாடாகும். |
இனி "இல்வாழ்வான் என்பான்" என்பது எழுவாயை விளக்க வந்த சிறப்புஅடை உருபு அன்று என அறிக. |
இனி, எட்டாம் வேற்றுமைப்பெயர் எய்தும் ஈறுதிரிதல், ஈற்றயல் நீடல், குன்றல், பிறிது வந்தடைதல் என்பவை ஒரு நிகரன அன்மையின் அவற்றை உருபாகக் கொண்டிலர் தமிழாசிரியர். |
உரையாசிரியன்மார் இச்சூத்திரத்துட் கூறிய பெயர், ஐ, ஒடு முதலியவற்றை உருபாக எண்ணி மயங்கி விளக்கினார். உருபுகள் ஆறே என்பதை ஆசிரியர் எழுத்ததிகாரத்துள் விளங்க ஓதி, ஈண்டுக் கொள்ளவைத்தமையானும், வேற்றுமை நிலை எட்டென்றதேயன்றி வேற்றுமை உருபுகள் எட்டு என ஆசிரியர் யாண்டும் ஓதாமையானும் உரையாளர் கருத்துக்கள் பொருத்தாமையறிக. |