92வேற்றுமையியல்

வேற்றுமைப்    புணர்ச்சிக்கும்    வேற்றுமைத்தொடருக்கும்    உள்ள
வேறுபாட்டினைக்கருதாமல்  எழுவாயையும்  விளியையும்  வேற்றுமையல்ல
எனக் கருதி மயங்குவாரும் உளர்.
 

இனி,  இவ்வேற்றுமைகளை  இங்ஙனம்  முறைபடுத்தியதற்குக் காரணம்;
வினைமுதல்இன்றி   யாதொரு செயலும்  பிறத்தற்கேலாமையான்  எழுவாய்
(பெயர்)  முன் வைக்கப்பட்டது. வினைமுதலின் செயல் சென்று  உறுதலின் செயப்படுபொருள்  இரண்டாவதாகவும், யாதொரு செயலும் கருவி (காரணம்) இன்றி   நிகழாததாலின்   கருவி   மூன்றாவதாகவும், கொள்ளுதல் என்பது அச்செயலின்  பயன் ஏற்பதாகலின் அதனை, அதன் பின்னும், ஒன்றினின்று ஒன்றைக் கோடல் நிகழ்தலின் இதனின் இற்றிது  என்னும்  அதனை அதன் பின்னும்,   பெற்றபின்    அதற்கு   அஃது   உடைமையாகலின்  கிழமை ஆறாவதாகவும் எல்லாவற்றிற்கும் நிலமும் காலமும்  அடிப்படை (ஆதாரம்) யாகலின் சிறப்புடைப் பொருளைப் பிற்படக்கிளத்தல்  என்பதானன்  இடம் ஏழாவதாகவும் சிறப்பில்லாத விளியை எட்டாவதாகவும் வைத்தனர் என்க.
 

உரையாசிரியன்மார்   சிறப்புடைப்   பொருளைத்  தானினிது கிளத்தல்
என்பதனான்   ஒடுவும், அதுவும்   ஓதினாரேனும், மூன்றவதற்கு  ஆனும்
(ஆலும்,   ஓடும்)   ஆறாவதற்கு அவ்வும்   (ஆதுவும்) கொள்க என்பார்.
இடைக்கால   நூலாசிரியர்   மேலும்   சிலவற்றைக்   கூட்டி   உருபாகக்
கூறுவர். பிறவேற்றுமைகட்கும் இவ்வாறே வேறு சில உருபுகளைச் சேர்த்துக் கூறுவர். அவையெல்லாம்  தமிழ் மரபும் தொல்காப்பிய  நெறியும் ஆகாமை அவ்வச்சூத்திரவுரையுள் கூறுதும்.
 

சூ. 65 :

அவற்றுள், 

எழுவாய் வேற்றுமை பெயர்தோன்று நிலையே   

(4)
 

க-து :

முதல் வேற்றுமையின் வேற்றுமை இயல்பாமாறு கூறுகின்றது.
 

உரை :  மேற்கூறிய     எட்டனுள்    முதல்     வேற்றுமையாவது 
பெயர்ப்பொருள்தான் தனித்துத் தோன்றி நிற்கும் நிலைமைத்தாகும்.
 

தனித்துத்   தோன்றுதலாவது  பொருட்பெயர்க்  குழுவினின்று  பிரிந்து
வினைமுதலாய்   நிற்றல்.  நிற்கும் நிலைமையாவது அறுவகைப்  பயனிலை
கோடற்கும்  பிறவேற்றுமை உருபுகளை ஏற்று வேறுபாடுறுதற்கும் உரியதாக
நிற்றலாம். ஒருபெயர்  முதல்  வேற்றுமையாய்ப் பயனிலை  கொள்ளுங்கால் தன்வடிவு  திரியாமலும்  ஏனைய  உருபுகளை ஏற்குங்கால் வடிவு திரிந்தும் நிற்கும்.