3. வினைநிலை உரைத்தல் என்பது காலம் வெளிப்படத் தோன்றும் புடைபெயர்ச்சி வினையான்வருதல். எ-டு: ஆகிடந்தது, சாத்தன் வந்தான், நீ உண்டாய், யான் வருவேன் என வரும். |
4. வினாவிற்கேற்றல் என்பது ஏற்புடைய வினாப்பெயரான் வருதல். எ - டு : ஆயாது? சாத்தன் யாவன்? எனவும், ஆ யாது? அஃது எவன்? எனவும் வரும். |
5. பண்புகொளவருதல் என்பது: பண்பினைச்சுட்டி வினைக் குறிப்பாக வருதல். எ - டு : ஆகரிது - சாத்தன் இனியன், கொற்றன் நெடியன் எனவரும். குணப்பண்பல்லாத உள, இல முதலாகிய வினைக்குறிப்பான் வருதல் அதன்பாற்படும். எ - டு : ஆ உளது, சாத்தன் உளன், ஆ இல்லை, சாத்தன் இலன் என வரும். இவற்றை வினை நிலை உரைத்தலின் பாற்படுப்பினும் இழுக்காதென்க. |
6. பெயர் கொள வருதல் என்பது பிறிதொரு பெயர்ச் சொல்லைப் பயனிலையாகக் கொண்டு வருதல். எ - டு : ஆபல, சாத்தன் அவன் எனவரும். |
வியங்கொளவருதல் வினை நிலை உரைத்தற் கண்ணும், வினாவிற்கேற்றல் பெயர் கொளவருதற்கண்ணும் அடங்கா என்பதற்குச் சேனாவரையர், "வினையும் பண்பும் பெயரும் முடிக்குஞ் சொல்லாதலேயன்றி முடிக்கப்படும் சொல்லாயும் வரும், வியங்கோளும் வினாவும் முடிக்குஞ் சொல்லாயல்லது முடிக்கப்படும் சொல்லாகவாரா என்பது அறிவித்தற்கு வேறுபடுத்துக்கூறினார்" என்பார். அவர் விளக்கம் போற்றிக் கொள்ளற்பாலதாம். |
வாழ்க அந்தணர், யாவன் அவன் என்றாற்போல எழுவாய் பின்னிற்பினும் அமையும் என்பது விளங்க முடிக்கும் சொல் என்னாது "பயனிலை" என்றார். |
இனி இச்சூத்திர விளக்கவுரையுள் தெய்வச்சிலையாரும், நச்சினார்க்கினியரும், சாத்தன் தலைவனாயினான், ஆயன் சாத்தன் வந்தான், சாத்தன் கண்நல்லன் முதலாய தொடர்களைக் காட்டி மேலைச் சூத்திரத்துள் "தோன்றும்நிலை" என்பதனான் முடித்துக் கொள்க என்பார். இத்தொடர்கள் பற்றி அவர் கூறும் விளக்கங்களும் கருத்துக்களும் இந்நூல் நெறிக்கு ஒவ்வாதனவாம். பிறரும் பிறவாறு கூறுவனவும் அவ்வாறேயாம். அவற்றை ஓர்ந்தறிந்து கொள்க. |