சூ. 67 : | பெயரி னாகிய தொகையுமா ருளவே |
| அவ்வும் உரிய அப்பா லான |
[6] |
க-து : | எழுவாயாகவரும் பெயர்கள் தனித்து வருதலேயன்றித் தொகைப் பெயராயும் வருமென்கின்றது. |
உரை : ஒருபொருளைச் சுட்டிவரும் பெயர்களானாகிய தொகைச் சொற்களும் உள. அவையும் முதல்வேற்றுமைப் பாலனவாய் நின்று பயனிலை கோடற்கு உரியவாம். |
தொகை மொழி என்னாது பெயரின் ஆகிய தொகை என்றதனான். அஃது ஒருபொருள் குறித்துவரும் பல சொற்களான் ஆன தொகைச்சொல் என்பது பெறப்படும். வேற்றுமைத் தொகை முதலிய அறுவகைத் தொகைகளையே தொகை மொழி எனல் தொல்லாசிரியர் மரபு. ஆசிரியர் "எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய" (எச்-24) என்பதனால் அவை ஒரு சொல் நீர்மையவாய் நின்று எழுவாயாகியும் பிற உருபுகளை ஏற்றும் பயனிலை கோடல் பெறப்படுதலின் ஈண்டுப் பெயரினாகிய தொகை என்றது அவையல்லாமல் பிறிதோராற்றான் வரும் தொகைச் சொல் என்பது புலனாம். |
அவைவருமாறு: பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ஆசிரியன் பேரூர்க்கிழான் இளங்கண்ணன் சாத்தன், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார். என்றாற் போலப் பல பெயர்கள் தொக்கு ஒரு பொருள் சுட்டி நிற்பனவாம். இவை ஓர் எழுவாயாய்ப் பயனிலை கொள்ளுமாறு : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி வாழ்க, வந்தான், யாவன், நெடியான், வள்ளல் எனவரும். |
பெயரினாகிய தொகையும் என்னும் உம்மையான் பெயரொடு வினை விராய்த்தொக்கனவும் அப்பாலன என்று கொள்க. அவை வருமாறு: கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி - நிலங்கடந்த நெடிமுடியண்ணல், தலையாலங்கானத்துச் செருவன்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என ஒருபொருள் சுட்டி நிற்பனவாம். அவையும் அவ்வாறே எழுவாயாய்ப் பயனிலை கொள்ளும் என்க. |
இங்ஙனம் அறுவகைத் தொகைமொழியுள் அடங்காமல் பல பெயர்கள் தொடர்ந்து ஒருங்குதொக்கு ஒரு பொருள் சுட்டிநிற்கும் தொகை மொழிகளும் எழுவாயாகிப் பயனிலை கெள்ளும் என விதிக்கும் இச்சூத்திரத்தின் இன்றியமையாத பயனை ஓராராய் உரையாசிரியன்மார் தத்தமக்குத் தோன்றியவாறு விளக்கம் கூறிச் சென்றனர். |